'போலி பில் தயாரித்தால் ஜி.எஸ்.டி., பதிவு முடக்கம்!'
'போலி பில் தயாரித்தால் ஜி.எஸ்.டி., பதிவு முடக்கம்!'
ADDED : பிப் 10, 2024 07:20 AM

சென்னை: அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், போலி, 'பில்' பட்டியல் தயாரித்து, வணிகம் செய்வோர்களின் ஜி.எஸ்.டி., பதிவு முடக்கம் செய்யப்பட வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
வணிக வரித்துறையின், கடந்த மாதத்திற்கான இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வு கூட்டம், சென்னை நந்தனத்தில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் மூர்த்தி, துறை செயலர் ஜோதிநிர்மலா சாமி, வணிக வரித்துறை ஆணையர் ஜெகந்நாதன் பங்கேற்றனர்.
அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், போலி 'பில்' பட்டியல் தயாரித்து, வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு, அவர்களின் ஜி.எஸ்.டி., பதிவு முடக்கம் செய்யப்பட வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாக கோட்டங்களின் வாயிலாக, வரி வருவாய் அதிகரிக்க வேண்டும்; அதற்காக, அனைத்து இணை ஆணையர்களும் வரி வருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.