ஐ.ஜி., சுற்றறிக்கை புறக்கணிப்பு: சார் - பதிவாளர்களுக்கு 'குட்டு'
ஐ.ஜி., சுற்றறிக்கை புறக்கணிப்பு: சார் - பதிவாளர்களுக்கு 'குட்டு'
ADDED : நவ 27, 2025 02:11 AM

சென்னை: பதிவுத்துறை ஐ.ஜி., பிறப்பிக்கும் சுற்றறிக்கைகளை புறக்கணிக்கும் சார் - பதிவாளர்கள், வழக்கில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஒரு பத்திரத்தை பதிவு செய்யும்போது, எவற்றை எல்லாம் பார்க்க வேண்டும் என, இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனினும், கடந்த சில ஆண்டுகளில் நடந்த சொத்து அபகரிப்பு பிரச்னைகளால், பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பான வழக்குகள் அதிகரித்த நிலையில், பதிவுத்துறை ஐ.ஜி., பல்வேறு சுற்றறிக்கைகளை பிறப்பித்தார்.
அதன்படி, ஒரு சொத்து பத்திரம் பதிவுக்கு வரும்போது, அது தொடர்பான, முந்தைய பதிவுகளில் தவறு இருக்கிறதா என்பதை வில்லங்க சான்று வாயிலாக, ஆய்வு செய்ய வேண்டும்.
இத்துடன், பதிவுக்கு வரும் சொத்தின் முந்தைய ஆவணங்கள், பட்டா போன்றவற்றை கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும். இதில், தற்போது விற்பவர் பெயரில் பட்டா இல்லாவிட்டாலும், அவருக்கு முந்தைய உரிமையாளர் பெயரிலாவது, பட்டா இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆனால், பெரும்பாலான சார் - பதிவாளர்கள், இந்த சுற்றறிக்கைளை முறையாக கடைப் பிடிப்பது இல்லை. இந் நிலையில், மோசடி பத்திரங்களை பதிவு செய்ததாக தொடரப்படும் வழக்குகளில், சார் - பதிவாளர்கள் சிக்குகின்றனர். தற்போது சிலர் கைது செய்யப்படும் நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நில மோசடி போன்ற பிரச்னைகளால், பொது மக்கள் பாதிக்கப்படுவதுடன், வழக்குகள் கடுமையானால் சார் - பதிவாளர்களும் சிக்குவர். இதை கருத்தில் வைத்து தான், பதிவுத் துறை தலைவர் பல்வேறு சுற்றறிக்கைகளை பிறப்பித்துள்ளார்.
ஆனால், சில சார் - பதிவாளர்கள், குறிப்பிட்ட சில பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றறிக்கைகளை புறக்கணிக்கின்றனர். ஐ.ஜி.,யின் சுற்றறிக்கைகளை புறக்கணிக்க கூடாது.
இதில் அலட்சியம் காட்டி, வழக்குகளில் சிக்கும்போது, துறை தரப்பில் இருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காது. துறை தலைமை உத்தரவை மதிக்காதவர்கள், சட்டப்படியான நடவடிக்கைகளை சந்தித்து தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

