'ராஷ்ட்ரீய விஞ்ஞான் புரஸ்கார்' விருதுக்கு சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் தேர்வு
'ராஷ்ட்ரீய விஞ்ஞான் புரஸ்கார்' விருதுக்கு சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் தேர்வு
ADDED : அக் 28, 2025 10:21 PM

சென்னை: மத்திய அரசு வழங்கும், 'விஞ்ஞான் புரஸ்கார்' விருதுக்கு, சென்னை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்கள் தேர்வாகி உள்ளனர்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதுமைகளுக்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சிக்கு புதிய வகை பங்களிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்பியல், வேதியியல், பொறியியல், வேளாண்மை, சுற்றுச்சூழல், அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட, 13 துறைகளை சார்ந்தோருக்கு, 'ராஷ்ட்ரீய'விஞ்ஞான் புரஸ்கார்' விருதுகளை, மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதன்படி, வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரத்துக்காக, விஞ்ஞான் ஸ்ரீ; 45 வயதுக்கு உட்பட்ட விஞ்ஞானிகளுக்கு, 'விஞ்ஞான் யுவா - சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' மற்றும் கூட்டுப் பணிகளுக்கான, 'விஞ்ஞான் குழு' ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதற்கு கடந்தாண்டு, அக்., 4 முதல் நவம்பர், 17 வரை இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரரின் கண்டுபிடிப்புகள், பங்களிப்புகள் உள்ளிட்டவற்றை, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையிலான ' உயர்மட்டக்குழு ஆய்வு செய்து, விருதாளர்களை தேர்வு செய்தது. அந்த பட்டியல் டில்லியில் நேற்று வெளியிடப்பட்டது.
பேராசிரியர்கள் இந்த விருதாளர்கள் பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி.,யின் வேதியியல் துறை பேராசிரியர் தாளப்பில் பிரதீப், விஞ்ஞான் ஸ்ரீ விருதுக்கும்; எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் மற்றும் அறிவியல் பொறியியல் துறை பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகியோர், விஞ்ஞான் யுவா - சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுக்கும் தேர்வாகி உள்ளனர்.
பேராசிரியர் தாளப்பில் பிரதீப், சுத்தமான நீருக்கான தொழில்நுட்பம், மேம்பட்ட கருவிகள், கூட்டு மூலக்கூறு போன்ற ஆய்வுகளுக்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.
இவரின் கண்டுபிடிப்பு வாயிலாக, குறைந்த விலையில் நிலையான நீர் சுத்திகரிப்பு முறையை மேம்படுத்தி, நாட்டிலுள்ள லட்சக்கணக்கானோருக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்துள்ளார். இந்த பங்களிப்புகளுக்காக, உலகளாவிய விருதுகளையும், பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
மின் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம், சென்னை ஐ.ஐ.டி.,யின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆய்வு மையம் மற்றும் சுகாதார பராமரிப்பு துறையின் தலைவராக உள்ளார்.
மருத்துவ கருவிகள், மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பகள், மனித மூளையின், '3டி இமேஜிங்' தொழில்நுட்பங்கள், சுகாதார தொழில்நுட்பத்தில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகளை செய்ததற்காகவும், நாட்டில் குறைந்த விலையில் சுகாதார பராமரிப்பு தொழில்நுட்பங்களை வழங்கியதற்காகவும் கவுரவிக்கப்பட்டு உள்ளார்.
பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால், கணினி அறிவியல் துறையில் கிரிப்டோகிராபி உள்ளிட்ட அடிப்படைகளை ஆராய்வது, இந்திய மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இந்திய மாணவர்களின் கணித திறமையை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது, தரவு குறியாக்கம், குவான்டம் குறியாக்கம், இயந்திர கற்றல் வழிமுறைகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக கவுரவிக்கப்பட்டு உள்ளார்.
விருதுகள் பெற்றது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறியதாவது:
எங்களின் சக பேராசிரியர்கள், ராஷ்ட்ரீய விஞ்ஞான் புரஸ்கார் விருதுக்கு தேர்வானது, மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. இந்த விருதுகள், தனிப்பட்டவர்களின் திறமைக்கு மட்டுமல்லாமல், அவர்களுடன் இணைந்து செயல்பட்ட குழுவுக்கும், சென்னை ஐ.ஐ.டி.,யின் புதுமை மற்றும் அர்ப்பணிப்பு சார்ந்த முயற்சிக்கும் கிடைத்துள்ளன.
நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் தொழில்நுட்பம் துணை செய்யும் என்ற நம்பிக்கையை, இந்த விருதுகளால் சென்னை ஐ.ஐ.டி., பதிவு செய்துள்ளது. இது, எங்களுக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

