'டியூட்' படத்திலும் என் பாடல்கள் ஐகோர்ட்டில் இளையராஜா தகவல்
'டியூட்' படத்திலும் என் பாடல்கள் ஐகோர்ட்டில் இளையராஜா தகவல்
ADDED : அக் 23, 2025 12:23 AM
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் படத்திலும், தன் அனுமதி இல்லாமல் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த பாடல்களை தன் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக, 'சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட், எக்கோ ரெக்கார்டிங் கம்பெனி மற்றும் ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இளையராஜா இசையமைத்த பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளை, வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய மொத்த வருவாய் தொடர்பான கணக்கு விபரங்களை சோனி நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில், 'இதுவரை வழக்கில் எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. தற்போது வெளியாகியுள்ள டியூட் படத்தில் கூட, அனுமதியின்றி இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன' என தெரிவிக்கப்பட்டது.
டியூட் படம் தொடர்பாக தனி வழக்கு தொடர, இளையராஜாவுக்கு அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை நவ., 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.