பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள்: சர்ச்சைக்கு இளையராஜா முற்றுப்புள்ளி
பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள்: சர்ச்சைக்கு இளையராஜா முற்றுப்புள்ளி
UPDATED : டிச 16, 2024 07:54 PM
ADDED : டிச 16, 2024 05:28 PM

சென்னை: என்னை மையமாக வைத்து பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள் என இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா, நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் வாசலிலேயே யானையை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற அவருக்கு, பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஜீயர் சுவாமிகளும் இளையராஜாவுக்கு மரியாதை செய்தார்.
ஆனால், கருவறைக்குள் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார்.
இந் நிலையில், சர்ச்சை குறித்து இளையராஜா சமூக வலைதள பதிவில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறி உள்ளதாவது;
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை.
நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு இளையராஜா கூறி உள்ளார்.