ADDED : ஜன 06, 2026 05:35 AM

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், சின்ன சேலம் அருகே மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 2024 ஜுன் மாதம், கள்ளச்சாராயம் குடித்து, 69 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்கு பின், மாவட்டம் முழுதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும், கள்ளக் குறிச்சி, சேலம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், கள்ளச்சாராய விற்பனை தலைதுாக்கின. அதை உறுதிப் படுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை அருகே வெள்ளிரிக்காடு என்ற கிராமத்தில், கள்ளச்சாராயம் விற்ற ராமன் என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 10 லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், 'இவருக்கு கள்ளச்சாராயம் எப்படி கிடைத்தது; எந்த இடத்தில் காய்ச்சப்பட்டது என்பது குறித்து, விரிவான விசாரணை நடக்கிறது' என தெரிவித்தனர்.

