சட்டவிரோத பணப் பரிமாற்றம்;இயக்குனர் அமீர் மீது குற்றப்பத்திரிகை
சட்டவிரோத பணப் பரிமாற்றம்;இயக்குனர் அமீர் மீது குற்றப்பத்திரிகை
ADDED : நவ 15, 2024 09:54 AM

சென்னை: சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 37; தி.மு.க., முன்னாள் நிர்வாகி, திரைப்பட தயாரிப்பாளர். போதை பொருள் கடத்தல் மன்னனான இவர் மீது, போதைப்பொருள் கடத்தல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில், ஜாபர் சாதிக், அவரது சகோதரர், மனைவி அமீனா பானு, திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட 12 பேர் மீதும் மற்றும் எட்டு நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை சென்னை சி.பி.ஐ., கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தில் அமீரும் பலனடைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜாபர் சாதிக் மீது, 2010ம் ஆண்டு தொடரப்பட்ட திருட்டு வி.சி.டி., விற்ற வழக்கு, பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் இரண்டாவது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம், மாஜிஸ்திரேட் ராஜேஸ் ராஜு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், குற்றம் சாட்டப்பட்டவர் மீது போதிய ஆதாரங்கள் நிருபிக்கப்படாததால், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.