சட்ட விரோத பண பரிமாற்றம் ஆடிட்டர் வீட்டில் சோதனை
சட்ட விரோத பண பரிமாற்றம் ஆடிட்டர் வீட்டில் சோதனை
ADDED : டிச 11, 2025 03:56 AM
சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில், ஆடிட்டர் வீடு உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் பொன்ராஜ்; ஆடிட்டர். இவரது வீட்டில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதே போல், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், 'லோகேஷ் டவர்' என்ற கட்டடத்தின் முதல் மாடியில் செயல்படும், 'எக்ஸா ஸ்பைஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திலும் சோதனை நடத்தினர்.
சென்னை திருவொற்றியூர் சீனிவாசப் பெருமாள் கோவில் தெரு, இரண்டாவது குறுக்கு தெருவில் வசிப்பவர் சேரன். அவர், அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மகள் சத்யாவின் கணவர், தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவர் மீதான சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சேரன் வீட்டிலும், துரைப்பாக்கம், சுப்புராயன் தெருவில் உள்ள, தனியார் நிறுவன அலுவலகம் உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

