சட்ட விரோத பண பரிமாற்றம்; தனியார் நிறுவனங்களில் 'ரெய்டு'
சட்ட விரோத பண பரிமாற்றம்; தனியார் நிறுவனங்களில் 'ரெய்டு'
ADDED : நவ 12, 2024 02:44 AM

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில், ஓ.பி.ஜி., எனர்ஜி மற்றும் ஓ.பி.ஜி., பவர் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள், சூரியசக்தி உள்ளிட்ட மின்சாரம் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளன.
மின்சாரம் தயாரித்து விற்பனை செய்ததில், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று காலை, 9:30 மணியளவில், இந்நிறுவன அலுவலகங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பு; ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அரவிந்த் குப்தா என்பவரின் வீடு; தேனாம்பேட்டை கே.பி.தாஸ் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கவுசிக் என்பவரின் வீட்டிலும், நேற்று காலை, 6:55 மணியில் இருந்து சோதனை நடத்தினர்.
சைதாப்பேட்டை சின்னமலையில், சந்தோஷ் என்பவர் நடத்தி வரும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இச்சோதனைக்கு, சி.ஆர்.பி.எப்., என்ற, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு அளித்தனர்.
சென்னையில் சோதனை செய்தது போல, ஆந்திர மாநில எல்லையான தடா மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலும், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.