பத்திரப்பதிவில் வருவாய் இழப்பை வசூலிக்க புதிய வழிமுறை அமல்
பத்திரப்பதிவில் வருவாய் இழப்பை வசூலிக்க புதிய வழிமுறை அமல்
ADDED : பிப் 15, 2024 07:16 AM

சென்னை: பத்திரப்பதிவில் ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிப்பதற்கும், தொடர் பதிவுகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், பதிவுத்துறை புதிய வழிமுறையை அறிவித்துள்ளது.
சொத்து பரிமாற்றங்கள் தொடர்பாக பத்திரங்களை பதிவு செய்யும் போது, வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் உரிய முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். இதில், சொத்து மதிப்பை குறைத்து அல்லது மாற்றி குறிப்பிடும் நிகழ்வுகளில் பதிவுத் துறைக்கும், அரசுக் கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பதிவுத்துறையில் தணிக்கையின் போது வருவாய் இழப்பு கண்டுபிடிக்கப்படுகிறது.
இவ்வாறு, வருவாய் இழப்பு தெரிய வரும் நிலையில், சம்பந்தப்பட்ட சொத்தின் உரிமையாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும். ஆனால், இவ்வாறு வசூலிக்க நடவடிக்கை எடுக்கும் முன், அந்த பத்திரத்தின் அடிப்படையில் அடுத்தடுத்த பரிமாற்றங்கள் நடக்கும் நிலையில் பதிவுத்துறைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதில், சம்பந்தப்பட்ட சொத்தின் தொடர் பதிவுகள் முடக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவு: தணிக்கை குறிப்புகள் வாயிலாக ஒரு பத்திரத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுஉள்ளது தெரிந்தால், அதன் உரிமையாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இதில் தணிக்கைக்கு முன், அடுத்தடுத்த பதிவுகள் நடந்திருந்தால், அதன் தற்போதைய உரிமையாளர்கள், புதிதாக பதிவுக்கு வருவோரிடம், இழப்புத் தொகையை விகிதாசார அடிப்படையில் பிரித்து வசூலிக்க வேண்டும்.
இதில் இழப்பு ஏற்பட்ட பத்திரத்தின் சொத்து தொடர்பாக, யாராவது புதிதாக பதிவுக்கு வந்தாலும், அவரிடம் இருந்து இழப்பு தொகையை பிரித்து வசூலித்து, பதிவை தடுக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், சொத்து உரிமையாளரின் பரிமாற்றங்கள் பாதிக்கப்படக் கூடாது. அதே நேரத்தில், பதிவுத்துறைக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் சார் -- பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

