ADDED : நவ 14, 2024 10:20 PM

சென்னை:திருச்சியில் இருந்து தாய்லாந்து சென்ற விமானத்தில், விளக்குகளை அணைத்த பின்பும், சிலர் சப்தமிட்டபடி சீட்டாட்டத்தில் ஈடுபட்டதால், மற்ற பயணியர் துாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
திருச்சியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும், 'தாய் ஏர் ஏசியா' விமானம், கடந்த 12ம் தேதி இரவு 11:05 மணிக்கு புறப்பட்டது. அதில், தமிழக பயணியர் சிலர் நின்றபடி, அதிக சப்தத்துடன் ரம்மி விளையாடி, மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பயணி ஒருவர், சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
விமானம் புறப்பட்டதும், சிறிது நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. பயணியர் அனைவரும் துாங்கத் துவங்கினர். அப்போது, தமிழக பயணியர் நான்கைந்து பேர் எழுந்து நின்று, கையில் சீட்டுக்கட்டுடன், ரம்மி விளையாட துவங்கினர்.
அதிக சப்தத்துடன் பேசியபடி விளையாடியதால், மற்ற பயணியர் துாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.
அவர்களை கண்டித்த போது, 'அப்படித்தான் விளையாடுவோம். உங்களுக்கு என்ன பிரச்னை' என்று, சத்தம் போட்டனர். பணிப்பெண்கள் எச்சரித்தும், அந்த நபர்கள் சீட்டு விளையாட்டை தொடர்ந்தனர்.
விமானத்தில் சர்வதேச பயணியரும் இருந்தனர். இதுபோன்ற நிகழ்வு ஒட்டுமொத்த பயணியருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
இப்படி நடந்து கொள்வோருக்கு, தகுந்த தண்டனை வழங்க வேண்டும். சம்பவம் குறித்து, விமான நிறுவனத்திடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.