வடமதுரையில் அதிர்வுடன் மீண்டும் வெடிச்சத்தம்: காரணம் தெரியாததால் மக்கள் பீதி
வடமதுரையில் அதிர்வுடன் மீண்டும் வெடிச்சத்தம்: காரணம் தெரியாததால் மக்கள் பீதி
ADDED : பிப் 04, 2024 02:38 AM
வடமதுரை,: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சுற்றுப் பகுதிகளில் நேற்று காலை மீண்டும் அதிர்வுடன் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. காரணம் தெரியாமல் அவ்வப்போது தொடரும் இந்த சத்தத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.
இம்மாவட்டத்தில் வடமதுரை, வேடசந்துார், சாணார்பட்டி, திண்டுக்கல் பகுதியில் 6 ஆண்டுகளாக அவ்வப்போது பலத்த வெடிச்சத்தம் கேட்பது வாடிக்கையாக உள்ளது. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது போல் உள்ளது. இது பெரும்பாலும் காலை 10:30 முதல் மதியம் 12:30 மணிக்குள் கேட்கிறது. ஒவ்வொரு வெடிச்சத்தத்திற்கும் பின்னர் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் தெரிந்தவர்களுடன் பேசுவதன் மூலம் அச்சத்தம் 20 கி.மீ., சுற்றளவில் கேட்டதை உறுதி செய்ய முடிகிறது. பாறைகளை பிளக்க சக்தி வாய்ந்த வெடிகளை யாரேனும் வெடிக்க செய்கிறார்களோ என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்தநிலையில் வடமதுரை சுற்றுப்பகுதியில் நேற்று காலை 11:34 மணிக்கு பலத்த வெடிச்சத்தம் கேட்டது. வீடுகளில் கதவுகள் அதிர்ந்தன. இதுபோன்ற சத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை மாவட்ட நிர்வாகம் தெளிவாக விளக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.