ரயிலில் 3 பெண் பயணிகளிடம் ரூ. 8 லட்சம் நகை, பணம் 'அபேஸ்' நெல்லிக்குப்பத்தில் துணிகரம்
ரயிலில் 3 பெண் பயணிகளிடம் ரூ. 8 லட்சம் நகை, பணம் 'அபேஸ்' நெல்லிக்குப்பத்தில் துணிகரம்
ADDED : பிப் 21, 2024 11:17 PM
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்த மூன்று பெண் பயணிகளிடம் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் அபேஸ் செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று முன்தினம் இரவு உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. எதிரே வந்த ரயிலுக்கு வழிவிட, நள்ளிரவு 2:00 மணியளவில், நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டு, 15 நிமிடங்களுக்கு பிறகு புறப்பட்டு சென்றது.
இந்த ரயிலில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த கோபிநாத் மனைவி ஆர்த்தி, 34, வடபழனியை சேர்ந்த சூரியநாராயணன் மனைவி காயத்ரிதேவி, 63, தஞ்சாவூரை சேர்ந்த மதியழகன் மனைவி அமுதா, 54; ஆகியோர் வெவ்வேறு பெட்டிகளில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்தனர். நெல்லிக்குப்பத்தில் நின்று ரயில் புறப்பட்டபோது, மூன்று பெண் பயணிகளின் கைப்பைகளையும் காணவில்லை.
ரயில் நின்றிருந்தபோது, மர்ம ஆசாமிகள் பைகளை ஜன்னல் வழியே திருடி சென்றுள்ளனர். ஆர்த்தியின் கைப்பையில் 20 கிராம் செயின், காயத்ரி தேவி பையில் 13 சவரன் நகைகள், அமுதாவின் பையில் அரசு ஆவணங்கள் இருந்தன. மேலும் இந்த மூவரின் மொபைல் போன்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது. இவற்றின் மதிப்பு 8 லட்சம் ரூபாய்.
மூவரும் அளித்த புகாரின்பேரில், கடலூர் முதுநகரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து திருடர்களை தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. கண்காணிப்பு கேமராக்களும் சரிவர செயல்படுவதில்லை. அதனால் அடிக்கடி இதுபோன்று திருட்டு சம்பவங்கள் நடக்கிறது.