அண்டாசு ரவீந்திரா வருமான வரித் துறையில் போட்ட ஆட்டம்
அண்டாசு ரவீந்திரா வருமான வரித் துறையில் போட்ட ஆட்டம்
UPDATED : செப் 05, 2011 06:40 AM
ADDED : செப் 02, 2011 11:43 PM

சென்னை: ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வர்த்தகம் நடக்கும் நிறுவனங்களில்,'ரெய்டு' என்றாலே முண்டாசு கட்டிக் கொண்டு இறங்கிய அண்டாசு ரவீந்திரா குறித்து, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கைதை தொடர்ந்து, அடுத்த வாரத்தில் அண்டாசுவை காவலில் எடுக்க, சி.பி.ஐ., முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
சமீபத்தில் சி.பி.ஐ., நடத்திய அதிரடி சோதனையில் சிக்கியவர், வருமான வரித்துறையின் கூடுதல் கமிஷனர் அண்டாசு ரவீந்திரா. அடாவடிக்கு பெயர் போனவர் என்று அவரது துறையினர் மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களால் வர்ணிக்கப்படும் ரவீந்திராவின் நடவடிக்கைகள் அனைத்தும், அத்துறைக்கு பொருத்தமானதில்லையாம். 1991ம் ஆண்டு, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான இவரிடம் சிக்கும் வர்த்தக நிறுவனங்களில், முதலில் கோடிக்கணக்கில் தான் பேசுவாராம். இந்த வகையில் தான், இவரிடம் எவரான் நிறுவனமும் சிக்கியது.
ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வர்த்தகத்தை கொண்ட எவரான் கல்வி நிறுவனம் குறித்த தகவல் கிடைத்ததும், கடந்த மாதம் 4ம் தேதி அந்த நிறுவனத்திற்கு, அண்டாசு தன் படை பரிவாரங்களுடன் சென்றுள்ளார். பெருங்குடியிலுள்ள எவரான் தலைமை அலுவலகத்தில், அதன் மேலாண் இயக்குனர் கி÷ஷார் இருக்கும் போது, உள்ளே நுழைந்து சோதனையிட்டார். அப்போது தான், அந்த நிறுவனம் 116 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததை இவர் கண்டுபிடித்து விட்டார்.
இது தெரிந்ததும், அண்டாசுவின் புருவம் உயர்ந்தது.'அடிமை சிக்கினான்' என்பதை உணர்ந்த அண்டாசு, ஐந்து கோடி ரூபாய் தந்தால் விட்டுவிடுவதாகக் கூற, புரோக்கரான உத்தம்சந்த் போரா மூலம் தொடர்ந்து பேரம் பேசப்பட்டது. இறுதியாக, 50 லட்ச ரூபாய் தருவதாக கி÷ஷார் ஒப்புக் கொள்ள, அந்த பணத்தை கொடுக்கும் போது தான், சி.பி.ஐ., வசம் மூவரும் சிக்கினர். இதற்கு முன்னதாக, சென்னையில் உள்ள பல முக்கிய அலுவலகங்களிலும் அண்டாசுவின் அடாவடி பறந்துள்ளது. இதன் மூலம், கோடிக்கணக்கான பணம் அண்டாசுவின் கையில் புரண்டதாக கூறப்படுகிறது.
அண்டாசுவின் வீட்டில் இருந்தும், வங்கி லாக்கரில் இருந்தும் மட்டுமே, 2 கிலோ 300 கிராம் அளவிற்கு தங்கம், வைர நகைகளை சி.பி.ஐ., கைப்பற்றி, வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது. இவருக்கு பணத்தை கொடுத்து மாட்டி விட்டுள்ள எவரான் நிறுவனம் ஒன்றும் சளைத்ததல்ல. இணைய தளம் மூலம் பல்வேறு விதமான கல்வி நிகழ்வுகளை நடத்தி வரும் இந்த நிறுவனத்தில், ஒரு விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ. எஸ்., அதிகாரி மற்றும் இன்னொரு அதிகாரியும் இயக்குனர் அந்தஸ்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் தான், அண்டாசு கோடிக்கணக்காக கேட்க காரணமாக அமைந்துள்ளது.
வருமான வரித்துறையில் திடீர் 'ரெய்டு' என்பது, சி.பி.ஐ.,யின் பல நாள் கண்காணிப்பிற்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். வருமான வரித்துறையில் இவர் சாம்பிள் மட்டுமே; இன்னும் பலர் உள்ளனர் என்கிறது சி.பி.ஐ., தரப்பு. இது தவிர, அண்டாசு பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. கூடுதல் கமிஷனர் என்ற வகையில், மாதம் 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் அண்டாசு, அடிக்கடி மனைவியுடன், அமெரிக்கா சென்று வந்துள்ளார்.
அமெரிக்கா செல்வதற்கு ஏது பணம் என்ற கேள்வி எழுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது, பல்வேறு வங்கிகளின் கிரெடிட், டெபிட் கார்டுகள் சி.பி.ஐ., வசம் சிக்கியுள்ளன. அவற்றில், லட்சக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்டாசுவின் மனைவி கவிதா, இன்ஜினியரிங் பட்டதாரியாக இருந்த போதும், வேலைக்கு செல்லவில்லை. ஆனால், கணவன், மனைவி இருவரும் சென்னையில் உள்ள அனைத்து பெரிய கிளப்களிலும் உறுப்பினர்கள். வார விடுமுறை தினங்களில் இருவரையும் கிளப்களில் பார்க்க முடியும் என கூறப்படுகிறது.
இது தவிர, யாரும் அவ்வளவு எளிதில் சேர முடியாத, மிகுந்த பொருட்செலவை ஏற்படுத்தும் சென்னை கோல்ப் கிளப்பில் இவர் உறுப்பினராம். கோல்ப் கிளப்பில் அண்டாசு எப்படி உறுப்பினர் ஆனார் என்பதும், மிகப் பெரிய புதிராக உள்ளதாம். வருமான வரித்துறையில் வேறு எந்த அதிகாரிக்கும் அண்டாசு பயந்ததில்லையாம்; ஒருவரைத் தவிர. அவர் தான் தலைமை கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற ரவீந்திரா.
அண்டாசு ரவீந்திராவை அடிக்கடி குடைந்து எடுப்பவர் இந்த ரவீந்திரா தான். இவர் ஓய்வு பெற்ற தினத்தன்று தான், அண்டாசுவும் ஜெயிலுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கைது படலம் முடிந்த நிலையில், சிறையில் இருக்கும் அண்டாசு ரவீந்திராவை காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ., முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.