ADDED : அக் 09, 2025 01:47 AM
சென்னை:மாநில மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
விழுப்புரத்தில் உள்ள தக்ஷசீலா மருத்துவ கல்லுாரியில், 50 எம்.பி.பி.எஸ்., இடங்களை துவங்க, தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அதேபோல், ஒசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரியில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், நாமக்கல்லில் உள்ள விவேகானந்தா மருத்துவக் கல்லுாரியில் 50 இடங்கள் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அந்த இடங்கள், மாநில மருத்துவ கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.
நாடு முழுதும் வெவ்வேறு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, மருத்துவ இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் முடிவுகள் வெளியான பின், தமிழகத்தில் மாநில மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.