பா.ஜ.,வினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு: செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
பா.ஜ.,வினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு: செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
UPDATED : ஜூலை 06, 2024 01:20 PM
ADDED : ஜூலை 06, 2024 12:12 PM

சென்னை: ‛‛ தமிழகத்தில் பா.ஜ.,வினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது'', என தமிழக பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
தீர்மானம்
சென்னை வானகரத்தில் பா.ஜ., செயற்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ,
* 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்.
* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
* தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.
* மேகதாது, முல்லை பெரியாறு அணை, சிலந்தி ஆறு, பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க தவறிய தி.மு.க.,விற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
* தமிழக சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் சக்தியை இழந்து விட்ட தி.மு.க., அரசுக்கு கண்டனம்
* பார்லிமென்டில் தமிழர்களின் கலாசார அடையாளமான செங்கோலை அவமதித்ததற்கும், மாநிலக் கல்வி கொள்கை குறித்த முன்னாள் நீதிபதி சந்துரு அறிக்கைக்கும் கண்டனம் ஆகிய 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வளர்ச்சி
இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் பா.ஜ., மெல்ல மெல்ல வளர்ந்து நிற்கிறது. பா.ஜ.,வினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சரிந்துள்ளது. மாநிலத்தில் எந்த கட்சியினர் மீதும் இல்லாத அடக்குமுறை பாஜ., மீது ஏவப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டு உள்ளார். நேற்று கட்சி தலைவர் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார். தி.மு.க., ஆட்சியில் சாமானிய மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மாநிலத்தில் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடுகிறது. இது குறித்து பேசவும், உண்மையை சொல்லவும், எதிர்க்கவும் யாருக்கும் தைரியம் இல்லை. மீறி எதிர்த்தால், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.