'ஆட்டிசம்' பாதிப்பு குழந்தைகள் அதிகரிப்பு; ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் தீர்வு காணலாம்
'ஆட்டிசம்' பாதிப்பு குழந்தைகள் அதிகரிப்பு; ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் தீர்வு காணலாம்
ADDED : ஜூலை 07, 2026 04:29 AM

- நமது நிருபர் -
'ஆட்டிசம்' எனப்படும், நரம்பியல் குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் செயல்பாடுகளை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய தெரபி சிகிச்சை அளித்தால் தீர்வு காணலாம்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை கே.கே.நகர் புனர்வாழ்வு மைய வளாகத்தில், தனியார் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து, அரசு ஆட்டிச ஒப்புயர்வு மையம் செயல்படுகிறது. இங்கு, ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, இலவசமாக, பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, தொழில்கல்வி சிகிச்சை, நடத்தை மற்றும் மனவளர்ச்சி சார்ந்த சிகிச்சைகள் போன்றவற்றுடன், பெற்றோருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தன்னார்வ அமைப்புகள் வாயிலாக, ஆட்டிசம் ஒப்புயர்வு மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில், 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆட்டிசம் பாதிப்புக்கு சிகிச்சைப் பெறுகின்றனர்.
சிகிச்சை பெறும் குழந்தைகள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், இம்மையங்களை தொடங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, கே.கே.நகர் அரசு ஆட்டிச ஒப்புயர்வு மைய துணை தலைமை செயல் அதிகாரி ரெமா சந்திரமோகன் கூறியதாவது:
ஆட்டிசம் என்பது, நரம்பியல் வளர்ச்சி குறைபாடு. குழந்தையின் வயதுக்கு ஏற்ப, தொடர்பு கொள்ளும் திறன், சமூக உறவுகளில் ஈடுபடும் முறை, சுற்றுப்புற சூழலுக்கு எதிர்வினையாற்றும் விதம், நடத்தை மற்றும் விளையாட்டு திறன் ஆகிய வளர்ச்சி இருக்காது.
மரபணு காரணிகளின் தாக்கத்துடன், ஆரம்பகால மூளை வளர்ச்சியில் ஏற்படும் வேறுபாடு, ஆட்டிசத்திற்கு காரணமாகின்றன. இவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள், ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களாக இருப்பர். சிலர் நன்றாக பேசவும், வழக்கமான பள்ளிகளில் படிக்கவும் முடியும்.
குழந்தை 5 வயதுக்குள் சிகிச்சை பெறும்போது, மூளை அவற்றை ஏற்றுக்கொள்ளும் தன்மையில் இருக்கும். அப்போது அளிக்கப்படும் சிகிச்சையின் வாயிலாக, தொடர்பு திறன், கற்றல் மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்த உதவும். இக்குழந்தைகளுக்கு சிறந்த நினைவாற்றல், கூர்ந்த கவனம், நேர்மை மற்றும் உண்மைத்தன்மை, ஆழ்ந்த ஆர்வம், தனித்துவமான சிந்தனை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
