தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் விற்றார்களா ? சந்தேகிக்கிறார் இ.பி.எஸ்.,
தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் விற்றார்களா ? சந்தேகிக்கிறார் இ.பி.எஸ்.,
UPDATED : மார் 08, 2024 01:16 PM
ADDED : மார் 08, 2024 12:51 PM

சென்னை: தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது , தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் விற்றார்களா ? என சந்தேகம் இருப்பதாக சென்னையில் நிருபர்களை சந்தித்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பியும் முதல்வர் விளக்கம் அளிக்கவில்லை. பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.
அரசின் கொள்கை விளக்க குறிப்பில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 2,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், 142 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர். மற்றவர்கள், தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள். தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தப்பி விட்டனரோ என்று எண்ணத் தோணுகிறது. போதைப்பொருளை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையானது. தமிழகம் போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டதோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு உள்ளது. கஞ்சா போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவர்களால், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் தினமும் நடக்கிறது.
ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் டிஜிபி கையில் விருது பெறுகிறார். போலீஸ் அதிகாரியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தி உள்ளார். செய்தி வெளிவந்த பிறகே அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். முதல்வர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. நிலைமை இப்படியிருக்க தமிழக மக்களை நலமா என்று முதல்வர் கேட்பது சரியா?
மனித சங்கிலி போராட்டம்
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்த மார்ச் 12ம் தேதி அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடக்கும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

