ADDED : மார் 17, 2024 06:55 AM
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு மற்றும் சோதனையை அதிகரித்துள்ளனர்.
குறிப்பாக, வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ரயில்களில், பயணியரை கண்காணித்தல், சோதனை மேற்கொள்ளுதல் போன்றவற்றை துவங்கி உள்ளனர்.
இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
சந்தேகம் படும்படியான நபர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்துவோம். 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை ரொக்கமாக எடுத்துச் சென்றால், உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். தங்கம் எடுத்துச் சென்றாலும் உரிய ஆவணம் வைத்திருப்பது அவசியம்.
உரிய ஆவணம் இன்றி லட்சக்கணக்கில் பணத்தை ரொக்கமாக எடுத்து வந்தால், பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

