UPDATED : டிச 10, 2024 07:27 AM
ADDED : டிச 10, 2024 07:13 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மெத்தபெட்டமைன் கடத்தல் அதிகரிக்கும் நிலையில் சமீப காலமாக இளைஞர்களிடம் அதிகளவில் பறிமுதல் செய்யப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகள் இந்திய - இலங்கை எல்லைக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து குறைவான நேரத்தில் இலங்கை சென்றடைய முடியும். இதனால் பெரும்பாலான கடத்தல் பொருட்கள் ராமநாதபுரம் பகுதியில் இருந்து தான் இலங்கைக்கு கடத்தப்படுகின்றன.
கஞ்சா, போதை மாத்திரைகள், மஞ்சள், பீடி இலைகள், தங்கம் போன்ற பொருட்கள் கடத்தல் தொடர்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது மெத்தபெட்டமைன் என்ற போதைப்பவுடருன் இளைஞர்கள் கைதாகி வருகின்றனர்.
கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ரோந்து பணியில் இருந்த போலீசார் நவ.,23 ல் சக்கரக்கோட்டை டாஸ்மாக் கடை பின்புறம் நின்ற ஹமீது அகமது 21, ஹபீப் முகமது 22, ஆகியோரை கைது செய்து 13 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
கீழக்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன் ஒருவர் கைது செய்யப்பட்டு மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு நாட்களில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கீழக்கரை பகுதியில் நேற்று முன் தினம் 4 கிராம் மெத்தபெட்டமைன் போதை பவுடருன் இருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் மெத்தபெட்டமைன் கடத்தல், விற்பனை அதிகரித்து வருகிறது. எங்கிருந்து யாரால் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரிக்கவேண்டும்.