அதிகரிக்கும் அவுட்டுக்காய் பயன்பாடு: வனவிலங்குகளை காக்க நடவடிக்கை
அதிகரிக்கும் அவுட்டுக்காய் பயன்பாடு: வனவிலங்குகளை காக்க நடவடிக்கை
UPDATED : ஜன 29, 2024 07:22 AM
ADDED : ஜன 29, 2024 12:24 AM

கோவை;அவுட்டுக்காய் பயன்பாடு தொடர்ந்து இருந்து வருவதால், நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வனத்துறையினருக்கு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் ஆகிய ஏழு வனச்சரகங்கள் உள்ளன.
சமீப காலமாக வனக்கோட்டத்தில், அவுட்டுக்காய் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் மறைத்து வைக்கப்படும் அவுட்டுக்காய்களை கடிக்கும் வனவிலங்குகள், வாயில் பலத்த காயமடைந்து உயிரிழக்கின்றன.
வனத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் அவுட்டுக்காய் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அவுட்டுக்காய் பயன்பாட்டை தடுக்க இயலவில்லை.
நேற்று முன்தினம் கூட, ஒருவர் அவுட்டுக்காய் பயன்படுத்திய போது, அது வெடித்து கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''வெடிமருந்து விற்பனையாளர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின், வெடிமருந்துகளை பயன்படுத்துகின்றனர். அவுட்டுக்காய் தயாரிக்க அவை தேவையில்லை. சாதாரண பட்டாசு மருந்துகளை பயன்படுத்தி தயாரிக்கலாம். இதனால் உள்ளூர் பட்டாசு விற்பனை கடைகள், கல் குவாரிகள், எல்லைப்புற கிராமங்களில், ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மோப்பநாய்கள் வாயிலாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவுட்டுக்காய்கள் அகற்றப்படுகின்றன,'' என்றார்.