'இண்டியா' கூட்டணி நாட்டை வழிநடத்தும் பணியை மேற்கொள்ளும்: முதல்வர் ஸ்டாலின்
'இண்டியா' கூட்டணி நாட்டை வழிநடத்தும் பணியை மேற்கொள்ளும்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூன் 05, 2024 02:59 PM

சென்னை: 'அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இண்டியா கூட்டணி மேற்கொள்ளும்' என திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மகத்தான வெற்றியை நமக்கு அளித்திருக்கிறார்கள் மக்கள். அந்த வெற்றிக்கு அயராமல் உழைத்தவர்கள் தொண்டர்களாகிய நீங்கள். இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது. நமது நோக்கத்தை அறிந்து கூடுதலான ஆதரவை வழங்கிய இயக்கங்களும் தோள் கொடுத்து நின்றன. இண்டியா கூட்டணியின் நம்பிக்கைமிக்க களமாகத் தமிழகம் அமைந்தது.
மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் விதைக்க நினைப்பவர்கள் தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றி விடவேண்டும் எனத் திட்டமிட்டார்கள். வன்ம விதைகளைத் தூவினார்கள். வதந்தி நீர் ஊற்றி அதனை வளர்க்கப் பார்த்தார்கள். நாட்டின் பிரதமர் 8 முறை தமிழகத்திற்கு வந்தார். மற்றொருபுறம், இவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்த அ.தி.மு.க. தனித்து நிற்பதாகக் கூறி மறைமுகக் கூட்டணியாகச் செயல்பட்டது. இந்த இரண்டு சக்திகளும் தமிழகத்திற்கு எந்தளவு ஆபத்தானவை, எந்த அளவுக்குக் கேடானவை என்பதைக் கொள்கைத் தெளிவுடன் எடுத்துரைப்பது மட்டுமே எனது பிரசாரமாக அமைந்தது.
மக்களுக்கு நம்பிக்கையில்லை
நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி, இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பா.ஜ.,வின் சரிவு காட்டுகிறது. அவர்களின் கோட்டை என நினைத்திருந்த மாநிலங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பார்லிமென்டில் சரிக்குச் சரியாக இண்டியா கூட்டணியின் உறுப்பினர்கள் இடம் பெறவிருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்கப்பட்டிருப்பதன் அடையாளமாகும்.
நாட்டை வழிநடத்தும் பணி
சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழகத்திலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இண்டியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.