சென்னை டெஸ்ட்டில் இந்தியா அபாரம்: 280 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது
சென்னை டெஸ்ட்டில் இந்தியா அபாரம்: 280 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது
ADDED : செப் 22, 2024 11:38 AM

சென்னை: சென்னை டெஸ்டில் அஸ்வின், ஜடேஜா சுழலில் சிக்கிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 376, வங்கதேசம் 149 ரன் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்த நிலையில் 'டிக்ளேர்' செய்தது. வங்கதேசத்துக்கு 515 ரன் என்ற கடின வெற்றி இலக்கை நிர்ணயித்தது. மூன்றாள் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து இருந்தது.
நான்காவது நாள் ஆட்டத்தில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷான்டோ 82 ரன்களுக்கும், ஷாகிப் 25 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பிறகு வந்த வீரர்கள் நிலைக்கவில்லை. லிட்டன் தாஸ் -1, ஹசன் மிராஜ் -8, தஸ்கின் அஹமது -5, ஹசன் மக்முத்- 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
கடைசியில் வங்கதேச அணியின் பேட்டிங் 234 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் -6, ஜடேஜா -3 , பும்ரா -1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி கான்பூரில் வரும் 27ம் தேதி துவங்குகிறது.