செலவு மிச்சம் செய்யும் ராக்கெட்; மொபைல் தளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது!
செலவு மிச்சம் செய்யும் ராக்கெட்; மொபைல் தளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது!
UPDATED : ஆக 24, 2024 03:07 PM
ADDED : ஆக 24, 2024 12:18 PM

சென்னை: மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ராக்கெட், சென்னை அருகே மொபைல் ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இத்தகைய சாதனை, இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.
சென்னை மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில் இருந்து இந்த ஹைப்ரிட் ராக்கெட் இன்று ஏவப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் ஹைப்ரிட் ராக்கெட் ஆகும். தமிழகத்தை சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'ஸ்பேஸ் ஜோன் இந்தியா' நிறுவனமும், மார்ட்டின் குழுமமும் இணைந்து, 'மிஷன் ரூமி 2024' என்ற பெயரில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்கியுள்ளன.
சோதனை முயற்சிக்கான இந்த ராக்கெட், இன்று வானில், 80 கி.மீ., துாரம் ஏவப்பட்டது. 'மொபைல் லாஞ்ச்பேட்' எனப்படும் நடமாடும் தளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் மூலமாக, 3 கியூப் செயற்கைக்கோள்களும், 50 பைகோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இத்தகைய முறையில் ராக்கெட் விண்ணில் செலுத்துவது உலகில் இதுவே முதல் முறை என்று இந்நிறுவனத்தினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
* ராக்கெட்டின் உயரம், 3.50 மீட்டர். இது, பூமியில் இருந்து வானில், 80 கி.மீ., துாரம் உயரே பறக்கக்கூடிய திறன் உடையது.
* இதில் அனுப்பி வைக்கப்படும் செயற்கைக்கோள்கள், புறஊதா கதிர் வீச்சு, காமா கதிர் வீச்சு, காற்றின் தரம், ராக்கெட் செல்லும்போது ஏற்படும் அதிர்வு உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க உதவும்.
* அதிநவீன தொழில்நுட்பம் வாயிலாக, ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம், ராக்கெட் ஏவுவதை புரட்சிகரமாக மாற்ற உருவாக்கப்பட்டுள்ளது.
* மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும்.
* மொத்தம், 60 - 80 கிலோ எடையில் சோதனை ராக்கெட்டில், 'நைட்ரஸ் ஆக்சைடு' உள்ளிட்ட எரிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன.
* ராக்கெட்டின் சில பாகங்கள் தவிர, முக்கிய பாகம், பாராசூட் வாயிலாக மீண்டும் பூமிக்கு திரும்பும். அதை எடுத்து சிறிய மாற்றங்கள் செய்து, மீண்டும் பயன்படுத்தலாம்

