2047க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும்: பியூஷ் கோயல் பேச்சு
2047க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும்: பியூஷ் கோயல் பேச்சு
UPDATED : ஜன 07, 2024 11:57 AM
ADDED : ஜன 07, 2024 11:55 AM
சென்னை: ''2047க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும். இதனை தமிழகமும் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில் குறிப்பிட்டார்.
சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வணக்கம், நமஸ்காரம் என்றுக்கூறி உரையை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் துவக்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: இயற்கையில் சிறந்த மாநிலம் தமிழகம். முதலீடு செய்ய வந்துள்ளவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு ட்ரில்லியன் இலக்கை தமிழகம் எட்ட வாழ்த்துக்கள். ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர் தான். அவரை பாராட்டுவோம். இஸ்ரோ விஞ்ஞானிகளை முன்னின்று நடத்தியவர் பிரதமர் மோடி. 100வது சுதந்திர தின விழாவின் போது, இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும்.
தமிழகத்திற்கு தனி இடம்
இந்தியா வலிமை அடைய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தமிழகத்தின் 1 ட்ரில்லியன் இலக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும். 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்குக்காக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியில் தமிழகத்துடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றுகிறது.
இளைஞர்கள் அதிகம்
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 10 ஆண்டுகளாக நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நலிவடைந்த பொருளாதாரத்தில் இருந்தது இந்தியா. தற்போது இந்தியா வளர்ச்சியடைந்த முதல் 5 நாடுகளின் பட்டியலில் உள்ளது. உலகிலேயே மக்கள் தொகையில் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா. 2047 என்ற இலக்கை நோக்கி நாட்டை வேகமாக முன்னெடுத்து செல்கிறோம். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். 2047க்குள் ஒவ்வொன்றிலும் காலனி அடிமைத்தனத்தில் இருந்து மீளுவோம். இந்தியாவின் 100வது சுதந்திர தினத்திற்குள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவோம்.
35 ட்ரில்லியன்
இந்தியாவை வளர்ந்த நாடாக்குவது ஒவ்வொருடைய கனவாக இருக்க வேண்டும். ஊழலில்லாத இந்தியா, பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தும் வகையில் செயல்படுவோம். பெண்களுக்கு பார்லிமென்டில், இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மிக மகிழ்ச்சியான செய்தி. 2047க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும். இதனை தமிழகமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகிலேயே தொழில் வளர்ச்சிக்கு மிக சிறந்த இடங்களில் ஒன்று தமிழகம். 2014 முதல் பிரதமர் மோடி எடுத்த தொடர் நடவடிக்கையால் தொழில்துறை வலுவாக உள்ளது. மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி. முதலீட்டாளர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தருவோம் என உறுதியளிக்கிறோம். இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.