டிரம்ப் வரி விதிப்பால் இந்தியா வலிமை பெறும்: சத்குரு பேட்டி
டிரம்ப் வரி விதிப்பால் இந்தியா வலிமை பெறும்: சத்குரு பேட்டி
ADDED : ஆக 30, 2025 06:47 AM

கோவை: ''அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி, இந்தியாவை சவால்களை எதிர்கொள்ளும் வலுவான நாடாக மாற்றும்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.
கோவை ஈஷா அறக்கட்டளை யோக மைய நிறுவனர் சத்குருவுக்கு, சமீபத்தில் சவாலான இரண்டு மூளை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இருப்பினும், இமயமலையில் உள்ள கைலாயத்துக்கு பைக்கில் 17 நாட்கள் யாத்திரை மேற்கொண்டார். இப்பயணத்தை முடித்து, டில்லியில் இருந்து நேற்று மாலை விமானத்தில் கோவை திரும்பினார். ஈஷா யோக மைய பக்தர்கள் வரவேற்றனர்.
யோகாவுக்கு சக்தி உண்டு
விமான நிலையத்தில், சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது: மூளையில் இரண்டு முறை ஆபரேஷன் செய்திருந்ததால், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறியிருந்தனர். மனித மூளைக்கு ஆற்றல் உண்டு; அந்த சக்தி யோகாவுக்கு உண்டு என்பதை நிரூபிக்க இப்பயணம் உதவியது. முடியவே முடியாது என்பதை முடிக்கும் சக்தி யோகாவுக்கு உண்டு என்பதை உணர முடிந்தது. எவ்வித சிரமமும் இல்லாமல், எளிதாக சென்று வந்து விட்டேன். எனது கைலாய யாத்திரை, வாழ்க்கையில் ஒரு அதிசயம் அல்ல; வாழ்க்கையே ஒரு அதிசயம் என்பதை நிரூபிக்கிறது.
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்திருந்தாலும், அது தவிர்க்க முடியாதது. அதற்காக, நம்முடைய மதிப்பை இழந்து நடந்துகொள்ள முடியாது. ஒரு சவால் நம் முன் வந்தால், அதை எதிர்கொள்ள, உறுதியான நாடு சரியான, வலிமையான நாடு என்பதை காட்ட, இது ஒரு வாய்ப்பாக உள்ளது. பாதிப்பு இருந்தாலும், எதிர்கொள்ளும் சக்தியும், வலிமையும் நமக்கு வரும்.
தடைகளை கடப்போம் இந்தியாவின் உறவு முற்றிலும் முறிந்து விட்டதாக சொல்ல முடியாது. பல்வேறு வகைகளில் கலாசாரம், மக்கள், உறவுகளால் அமெரிக்காவுடன் இணைந்து உள்ளோம். அவற்றை எளிதாக விட்டு விட முடியாது. அரசியல் ரீதியாகவும் நீண்டகால தொடர்பில் அமெரிக்கா இருந்து வருகிறது. உலகிலேயே 500 சிறப்பு நிறுவனங்கள் உள்ள அமெரிக்காவில், 50 நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் உள்ளனர். எல்லா சமயங்களிலும் எல்லாம் நன்றாக நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதில், இதுவும் ஒன்று. தடைகளை கடந்து செல்வோம். இவ்வாறு, சத்குரு தெரிவித்தார்.