இலங்கையில் வெள்ள மீட்புப் பணிகள் தீவிரம்: உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த்
இலங்கையில் வெள்ள மீட்புப் பணிகள் தீவிரம்: உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த்
ADDED : நவ 28, 2025 03:17 PM

கொழும்பு: இலங்கையின் வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபட்டுள்ளது. அந்த போர்க்கப்பல்களில் உள்ள ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டது.
நம் அண்டை நாடான இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இலங்கை முழுதும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, குடியிருப்பு பகுதிகளை நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
56 பேர் பலி
குறிப்பாக, தேயிலை தோட்ட பகுதிகளான நுவரெலியா, பதுல்லா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பதுல்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டு, 16 பேர் உயிருடன் புதைந்தனர். நுவரெலியாவில் நான்கு பேர் இறந்தனர். நாடு முழுதும் 56 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
நிலச்சரிவில், 400 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், 12,300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. பாறைகள், மரங்கள் விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்து, சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
உதவிக்கரம்
இந்நிலையில், வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபட்டுள்ளது. அந்த போர்க்கப்பல்களில் உள்ள ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டது.
அவசரகால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களைத் தவிர, மற்ற அனைத்து சேவைகளுக்கும் இன்று இலங்கை அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

