அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி செப்டம்பரில் 12% சரிவு கண்டது
அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி செப்டம்பரில் 12% சரிவு கண்டது
ADDED : அக் 20, 2025 10:38 PM

மும்பை: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி கடந்த செப்டம்பரில் சரிந்த போதிலும், பிற நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாக சந்தை மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது.
மேலும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி, கடந்த செப்டம்பரில் 11.90 சதவீதம் சரிந்து, 48,400 கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது. முந்தைய ஆகஸ்டில் ஏற்றுமதி 7 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. மாறாக, பிற நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி, 10.90 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆகஸ்டில் ஏற்றுமதி வளர்ச்சி 6.60 சதவீதமாக பதிவாகி இருந்தது.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அதிபர் டிரம்பின் அறிவித்த உத்தரவு, கடந்த ஆக., 27 முதல் அமலுக்கு வந்தது. ஏற்றுமதி சரிவுக்கு இது முக்கிய காரணமாகும்.
இந்திய நிறுவனங்கள், அமெரிக்க வரி விதிப்பு அமலுக்கு வரும் முன்னர், சரக்குகளை அவசரமாக, முன்னதாகவே அனுப்பியதால் தான், ஏற்றுமதி சரிவு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இல்லையென்றால், சரிவின் தாக்கம் மிக மோசமாக இருந்திருக்கும்.
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதிக்கு, அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகியவை சவால்களாக தொடர்கின்றன.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, சேவை ஏற்றுமதி, நிலையான அன்னிய செலாவணி வரத்து மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு ஆகியவை காரணமாக, கட்டுப்பாட்டில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

