எத்தனால் கலப்பை 27 சதவிகிதம் ஆக உயர்த்த வேண்டும் மத்திய அரசுக்கு இந்திய பசுமை எரிசக்தி கூட்டமைப்பு பரிந்துரை
எத்தனால் கலப்பை 27 சதவிகிதம் ஆக உயர்த்த வேண்டும் மத்திய அரசுக்கு இந்திய பசுமை எரிசக்தி கூட்டமைப்பு பரிந்துரை
ADDED : அக் 29, 2025 01:32 AM

கடந்த ஐந்து ஆண்டுகளில், நம் நாட்டின் எத்தனால் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. மிகக் குறைந்த உற்பத்தியில் துவங்கி, 1,700 கோடி லிட்டரை நெருங்கும் நிலையில், இந்த வளர்ச்சி இந்திய தொழில் முனைவோர் மற்றும் அரசின் நீடித்த கொள்கை பார்வைக்கு ஒரு சான்றாகி நிற்கிறது. எத்தனால் கலப்பு எத்தனால் கலப்பு திட்டமான ஈ.பி.பி., என்பது எரிபொருள் கொள்கை மட்டுமல்ல; இது கிராமப்புற வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பு முயற்சியும் ஆகும். இது விவசாயிகள், தொழில்கள் முதல், சுற்றுச்சூழல் வரை, பொருளாதாரத்தின் அனைத்து அம்சங் களையும் உயர்த்துவதாக உள்ளது.
பொருளாதார பாதிப்பு எத்தனால் கலப்புத் திட்டம், நம் நாட்டின் எரிபொருள் பொருளாதாரத்தை மாற்றியமைத்துள்ளது. ஒருகாலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக, நம் அன்னிய செலாவணி மிக அதிக அளவில் வெளியேறியது.
ஆனால், இப்போது எத்தனால் கலப்பு என்பது விவசாயிகளுக்கு ஒரு நிலையான வருமானம் தருவதாக மாறியுள்ளது.
எரிபொருளில் எத்தனால் கலப்பின் வாயிலாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 1.44 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதி செலவை மிச்சப்படுத்தி, நாட்டின் அந்நிய செலாவணியை சேமித்து உள்ளன.
தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பில், விவசாயிகள் ஈட்டும் தொகை ஒரு ஆண்டுக்கு 40,000 கோடி ரூபாயாக கணக்கிடப்படுகிறது. தனியார் முதலீடுகள், 'தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தி, தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
கிராமப்புற நன்மைகள் ஒவ்வொரு எத்தனால் ஆலையும் கிராமப்புற வேலைவாய்ப்பின் மையமாக உள்ளது. புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதுடன், விவசாயத்தை துாய்மையான ஆற்றலுடன் இணைக்கிறது.
கரும்பு, மக்காச்சோளம் போன்றவற்றுக்கான நம்பகமான சந்தைகளை விவசாயிகள் பெறுகின்றனர்.
சுற்றுச்சூழல் நன்மைகள் பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, எத்தனால் கலப்பு கார்பன் உமிழ்வை 50 சதவீதம் வரை குறைக்கிறது. இதுவரை, இந்த திட்டம் 736 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை தவிர்த்து உள்ளது.
இது, 30 கோடி மரங்களை நடுவதற்கு சமம். விவசாய கழிவுகளை ஆற்றல் மற்றும் உயிர் உரங்களாக மாற்றுவதால் மண்ணின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
விரைவாக 3ம் இடம் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே இ - 20 கலப்பு லட்சியத்தை அடைவதில் இந்தியா பெற்ற வெற்றி, உலகளவில் எத்தனால் உற்பத்தியாளர்களில் முதல் மூன்று இடங்களில் இடம்பிடிக்க வைத்துள்ளது.
இருப்பினும், நடப்பு ஆண்டு ஒரு தற்காலிக வினியோகம், தேவையில் சமநிலையின்மை ஏற்பட்டுள்ளது. இது ஒரு குறுகிய கால சந்தை பாதிப்பு. வேகமாக வளர்ந்து வரும் இத்துறையின் இயற்கையான விளைவு.
இதை சமாளிக்க, எத்தனாலின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் கொள்கை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தேவை. போக்குவரத்து முதல் மின்சாரம் வரை, பிற தொழில்துறை தயாரிப்புகளில் எத்தனாலின் பங்கை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பிரேசில் மற்றும் அமெரிக்கா ஏற்கனவே எரி பொருளில் 27- - 30 சதவீதம் வரை எத்தனால் கலப்பை மேற்கொள்கின்றன. இது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது.
ஐ.எப்.ஜி.இ., பரிந்துரைகள் எத்தனால் சந்தையை ஸ்திரப்படுத்தவும், நீண்டகால வளர்ச்சியை தக்கவைக்கவும், இந்திய பசுமை எரிசக்தி கூட்டமைப்பான ஐ.எப்.ஜி.இ., சில நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறது:
எரிபொருளில் எத்தனால் கலப்பை, 27 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும்
போதுமான உள்நாட்டு திறனுடன், இறக்குமதிகளை கட்டுப்படுத்தி, 100 கோடி லிட்டருக்கும் அதிகமான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்
எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் நிறுவன நுகர்வோருக்கு எத்தனால் விற்பனையை அனுமதிக்க வேண்டும்
டீசலில் புதிய எத்தனால் கலப்பு விருப்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும்
இ20, இ85-, இ100 போன்றவற்றுக்கு இணக்கமான வாகனங்களை பெரிய அளவில் உற்பத்தி செய்ய வேண்டும்.
நம் நாட்டின் எத்தனால் பயணம் தொலைநோக்கையும் புதுமையையும் பிரதிபலிக்கிறது. சரியான நேரத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், பலதரப்பட்ட சந்தைகள் மற்றும் தொடர்ச்சியான பொது- தனியார் கூட்டு ஆகியவற்றால் எத்தனாலை சிறந்ததொரு வாய்ப்பாக மாற்ற முடியும்.
சஞ்சய் கஞ்சூ,
பொது இயக்குநர், பசுமை எரிசக்திக்கான இந்திய கூட்டமைப்பு ஐ.எப்.ஜி.இ.,
அமுல் கோயல்,
இணை தலைவர், ஐ.எப்.ஜி.இ.,

