இந்தியாவில் முதல்முறை...! கோவையில் கல்லீரல் மாற்று சிகிச்சையில் பரஸ்பரம் உதவிக்கரம்
இந்தியாவில் முதல்முறை...! கோவையில் கல்லீரல் மாற்று சிகிச்சையில் பரஸ்பரம் உதவிக்கரம்
ADDED : ஜூலை 19, 2025 07:29 AM

கோவை ஜெம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைகள் இடையேயான, இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதன் வாயிலாக, இறுதி நிலை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட, இரு நோயாளிகளுக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது.
ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, சேலத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவருக்கும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த 53 வயது ஆண் ஒருவருக்கும், கல்லீரல் பாதிப்பு இருந்தது.
அவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. உறுப்பு தானம் செய்ய அவர்களின் மனைவியர் முன்வந்தனர். ரத்தகுரூப் வேறாக இருந்ததால், தானம் செய்ய முடியாமல் போனது.
ஜெம் மருத்துவமனையில் உள்ள நபரின் மனைவியின் கல்லீரலை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள நபருக்கும், இவருடைய மனைவியின் கல்லீரலை ஜெம் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் கொடுக்க வாய்ப்புள்ளது தெரிந்தது. இருவருக்கும் இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கல்லீரல் மாற்று சிகிச்சை இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழகத்தின் கோவையில் வெற்றிகரமாக நடந்து பாராட்டை பெற்றுள்ளது. அப்போது, இரண்டு மருத்துவ குழுவினரும் தொடர்பு கொள்ளும் வகையிலான வசதி செய்யப்பட்டிருந்தது. சிகிச்சை முடிந்த இருவரும் நலமுடன் உள்ளனர்.
இது மருத்துவமனைக்குள் மாற்று அறுவை சிகிச்சை என்பதால், சட்ட சிக்கல்கள் இருந்தன. நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைகள் இரண்டு மருத்துவமனைகளிலும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டியிருந்தது. மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் கீழ் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்காக இரண்டு மருத்துவமனைகளுக்கும் இடையே சுமார் 3.5 கி.மீ. பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை ஜூலை 3ம் தேதி செய்யப்பட்டது.

