இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
ADDED : டிச 12, 2025 12:03 PM

நமது சிறப்பு நிருபர்
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும். கோதுமை உற்பத்தியும் அதிகரிக்கும் என அமெரிக்க வேளாண்மைத் துறை கணக்கிட்டுள்ளது.
நடப்பு 2025-26ம் ஆண்டு பருவத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தி 15.2 கோடி டன்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறையும். கடந்த ஆண்டு 4.15 கோடி மெட்ரிக் டன் உற்பத்தியான நிலையில், 4 கோடி மெட்ரிக் டன்னாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளிர்கால பயிரான கோதுமையின் உற்பத்தி, கடந்தாண்டு 11.3 கோடி டன் இருந்த நிலையில், 11.7 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் டிசம்பர் 5ம் தேதி வரை 2.4 கோடி ஹெக்டேரில் கோதுமை பயிர் செய்துள்ளனர். இது கடந்தாண்டில் 2.1 கோடி ஹெக்டேராக இருந்தது. நெல்லின் சாதனை உற்பத்திக்கு, நடவு செய்யப்பட்ட பரப்பளவு அதிகரிப்பு மற்றும் பருவகால சூழ்நிலைகள் தான் காரணம். பருத்தியை விட அதிக மகசூல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பலர், பருத்தியை கைவிட்டு, நெற்பயிருக்கு மாறியுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை சாதகமாக இருந்ததாலும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சாதகமான மழை கிடைத்ததாலும், நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 84 லட்சம் ஹெக்டேராக அதிகரித்த போதிலும், உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. இந்த விவரங்களை அமெரிக்க வேளாண் துறை, செயற்கைக்கோள் ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு, காரீப் பருவத்தில் அரிசி உற்பத்தி 12.4 கோடி, டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் காரீப் உற்பத்தியை விட 17 லட்சம் டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

