UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 06:07 PM
– சேதுராமன் சாத்தப்பன் –
விடியல் மெல்லப் பிறக்கிறது. உருக்கு ஆலையின் புகைபோக்கியில் இருந்து புகை எழ, உள்ளே செந்நிறமாக இரும்பு கொதிக்கிறது. அந்த நெருப்புக்கு உயிர் கொடுப்பது நிலக்கரி.
அந்த நெருப்புக்கு ஒரு மாற்று இருக்குமா? தேசத்தின் வளர்ச்சிக்கு உருக்கு அவசியம். அதே நேரத்தில், நாட்டின் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் உருக்கு துறையின் பங்கு 12 சதவீதம். கோக்கிங் நிலக்கரியில் 85 சதவீதம் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையில், எரிபொருளுக்கான மாற்றுத் தேடலும் தீவிரமடைந்துள்ளது.
அதே நேரத்தில், வயல்களில் நெல் தாள் உள்ளிட்ட விவசாயக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. தொழிற்சாலைக்கு எரிபொருள் தேவை; வயலுக்கு கழிவை அகற்ற வேண்டும். இந்த இரண்டையும் இணைக்க முடியுமா?
அந்தக் கேள்வியில்தான் ‘கிளிமித்ரா’வின் கதை தொடங்குகிறது. 2025-ல் தொடங்கப்பட்ட டில்லியைச் சேர்ந்த இந்த நிறுவனம், விவசாயக் கழிவுகளை வெப்பச் சிதைவு முறையில் உயிரி நிலக்கரியாக மாற்றுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் புவிசார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கழிவுகள் கிடைக்கும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றை தொழில்துறை எரிபொருளாக மாற்றுகிறது.
நிறுவனத்தின் தகவல்படி, இதன் தயாரிப்பில், 75 முதல் 85 சதவீதம் வரை நிலையான கார்பன் உள்ளது. புதைபடிவ நிலக்கரியுடன் ஒப்பிடும்போது கரியமில வாயு வெளியேற்றத்தை, 90 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கிறது.
இதன் பயன் தொழிற்சாலையோடு நின்றுவிடவில்லை. வயலில் வீணாகும் கழிவுக்கு மதிப்பு கிடைக்கிறது. விவசாயி முதல் தொழிற்சாலை வரை ஒரு புதிய மதிப்புச் சங்கிலி உருவாகிறது.
குஜராத்தின் கட்ச் பகுதியில், முதல் ஆலையைத் தொடங்கியுள்ள கிளிமித்ரா, பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. 2035-க்குள் 70 லட்சம் டன் கரியமில வாயுவை அகற்றுவது, 40 லட்சம் டன் நிலக்கரிக்கு மாற்றாக தனது பொருட்களைப் பயன்படுத்துவது, ஒரு லட்சம் கிராமப்புற வாழ்வாதாரங்களை உருவாக்குவது அதன் இலக்குகள்.
மேலும் விவரங்களுக்கு: https://climitra.com/
உங்கள் சந்தேகங்களுக்கு: இ–மெயில்: Sethuraman.sathappan@gmail.com; அலைபேசி: 9820451259; இணையதளம்: www.startupandbusinessnews.com
