பாடத்திட்டங்களை உருவாக்குவதில் தொழில் துறை பங்களிப்பு அவசியம் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு
பாடத்திட்டங்களை உருவாக்குவதில் தொழில் துறை பங்களிப்பு அவசியம் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு
ADDED : செப் 25, 2026 03:28 AM

சென்னை: ''பாடத்திட்டங்களை உருவாக்குவதில், தொழில் துறையினரின் பங்களிப்பு மிகவும் அவசியம்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு எனும், சி.ஐ.ஐ., சார்பில், 'தொழில்நுட்பத்தின் வழியே கல்வியை வலுப்படுத்துதல்' என்ற தலைப்பிலான மாநாடு மற்றும் கல்வி கண்காட்சி, சென்னையில் நேற்று தொடங்கியது.
அண்ணா பல்கலை, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள், வி.ஐ.டி., கல்வி நிறுவனம் உட்பட, 75க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன.
சென்னை வர்த்தக மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் விஸ்வநாதன், மாநாட்டு மலரை வெளியிட்டு, கல்வி கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
பாடத்திட்டத்தை உருவாக்குவதில் தொழில் துறையினரின் பங்களிப்பு இருக்க வேண்டும். தொழில் துறை திட்டங்களில், மாணவர்களை அனுமதிக்க வேண்டும். கல்லுாரிகளில், தொழில் துறை வல்லுநர்கள், சிறப்பு பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும்.
தொழில் துறையில் மாணவர்களுக்கான பயிற்சிகள் பரவலாக்கப்பட வேண்டும். தொழில் துறை நிதியுதவியுடன் ஆய்வகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
கல்லுாரிகள், தொழில் துறையினருடன், அதிக அள விலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில், வி.ஐ.டி., துணைத் தலைவர் செல்வம் பேசுகையில், ''பதில்களை உருவாக்கு வதில், இயந்திரங்கள் சிறந்தவையாக மாறும்போது, மாணவர்கள் அந்த தகவல்களை மதிப்பீடு செய்வதில் சிறந்தவர் களாக மாற வேண்டும்,'' என்றார்.
இந்த கண்காட்சி நாளை வரை நடக்கிறது.
