செந்தில் பாலாஜி மீது விசாரணை: 3 மாதங்களில் முடிக்க உத்தரவு
செந்தில் பாலாஜி மீது விசாரணை: 3 மாதங்களில் முடிக்க உத்தரவு
ADDED : பிப் 29, 2024 12:57 AM

சென்னை:சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்கும்படி, முதன்மை சிறப்பு நீதிமன்றத்துக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, இரண்டாவது முறையாக, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகினர்.
இருதரப்பு வாதங்களுக்கு பின், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் உதவியாளர்களுடன் சேர்ந்து சதி செய்து, பணி நியமனங்களுக்கு, 67.74 கோடி ரூபாய் பணம் பெற்றதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ளன.
இந்த வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறி, அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இதில், கடந்த ஆண்டு ஜூன் 14ல், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கிலும் புலனாய்வு முடிந்து, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பென்டிரைவில் கோப்புகள்
பென்டிரைவில் இருந்த, 284 கோப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. தேவையான கோப்புகளை தேர்ந்தெடுத்து, ஆய்வு அறிக்கை கோருவது, விசாரணை அமைப்பின் முடிவைப் பொறுத்தது.
முதலில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் பதிவு செய்த வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், அறிக்கைகள் அடிப்படையில் தான், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கில் சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும், அமலாக்கத்துறை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தேவையான ஆதாரங்களை தேர்வு செய்வது, அமலாக்கத்துறையின் முடிவைப் பொறுத்தது.
கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வசம் உள்ளது. டிஜிட்டல் ஆதாரத்தின் நகலை, நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட அச்சு வடிவில், அமலாக்கத்துறை பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஆரம்ப முகாந்திரம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தான், நீதிமன்றம் பார்க்க வேண்டும்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளை பார்க்கும்போது, அவற்றில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரியவில்லை. மேலும், ஆதாரங்களை பரிசீலிப்பது, வழக்கு விசாரணையின் போது தான் என, கீழமை நீதிமன்றமும் சரியாக தெரிவித்துள்ளது.
எனவே, அறிக்கையை பார்க்கும் போது, அதில் ஆரம்ப முகாந்திரம் உள்ளதும், தற்போதைய கட்டத்தில் அதை பரிசீலிக்க எடுக்கலாம் எனவும் முடிவு செய்கிறேன்.
ஒரே மாதிரியான ஆவணங்களின் அடிப்படையில் தான், முதலில் பதிவான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை பற்றி, இதுவரை செந்தில் பாலாஜி கேள்வி கேட்கவில்லை. அதே ஆவணங்களை தான் அமலாக்கத்துறை சேகரித்துள்ளது.
அதன் அதிகாரப்பூர்வ தன்மைக்காக, சிறப்பு நீதிமன்றத்தின் சான்றை பெற்றுள்ளது.
எனவே, மின்னணு ஆவணங்களில் அமலாக்கத்துறை திருத்தம் செய்திருப்பதாக கூறும் வாதத்தில், இந்த நீதிமன்றம் திருப்தி அடையவில்லை.
மின்னணு ஆவணங்களின் மதிப்பை பரிசோதிக்க, இந்த நீதிமன்றம் பொத்தாம் பொதுவான விசாரணையை நடத்த முடியாது. அமலாக்கத்துறையை நம்பி இருக்கும் ஆதாரங்களின் உண்மைத்தன்மைக்கு, ஆரம்ப முகாந்திரம் உள்ளதா என்பதை தான், பார்க்க வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை பார்க்கும்போது, அவற்றின் உண்மைத்தன்மை மீது எந்த சந்தேகமும் இல்லை. ஜாமின் மனுவை விசாரிக்கும் கட்டத்தில், ஆவணங்களின் மதிப்பை சந்தேகப்பட எந்த காரணமும் இல்லை. பென்டிரைவில் முறைகேடு செய்திருப்பதாக மனுதாரர் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.
புகாரில் கூறியிருப்பதை பார்க்கும் போது, வேலைக்காக விண்ணப்பித்த பலரும் நேரடியாகவோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற உதவியாளர்கள் வாயிலாகவோ, பணம் கொடுத்திருப்பதை காட்டுகிறது.
போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த போது, பதவியை தவறாக பயன்படுத்தி பணம் பெற்றதற்கான ஆரம்ப முகாந்திரம் இருந்தால், அதையே குற்றச்செயலில் இருந்து வந்ததாக கருதிக் கொள்ளலாம்.
முகாந்திரம் உள்ளது
புலன் விசாரணையின் போது, சாட்சிகளிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களில் பல, மனுதாரரை குறிக்கின்றன. அதனால், மனுதாரருக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற குற்றத்துக்கான ஆரம்ப முகாந்திரம் உள்ளது.
தான் குற்றம் அற்றவர் என்பதற்கு, நீதிமன்றத்தை திருப்திப்படுத்தும் வகையிலான முகாந்திரங்களை, மனுதாரர் அளிக்கவில்லை.
சிறையில் இருக்கும் போது, எட்டு மாதங்கள் வரையிலும் இலாகா இல்லாத அமைச்சராக தான் நீடித்தார். அதில் இருந்து, அவருக்குள்ள செல்வாக்கு தெரிகிறது. அரசும் அவருக்கு அளித்த முக்கியத்துவத்தை காட்டுகிறது.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.,வாக தொடர்கிறார் என்பதால், அவருக்கு அரசில் உள்ள செல்வாக்கும் தொடர்கிறது.
அப்படி இருக்கும் போது, இந்த வழக்கில் உள்ள சாட்சிகள் பெரும்பாலும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், பணம் கொடுத்தவர்கள் என்பதால், அவர்களிடம் செல்வாக்கை காட்ட முடியும்.
ஏற்கனவே, ஒரு வழக்கில் சமாதானம் நடந்து, பின், உச்ச நீதிமன்றம் குறுக்கிட்டதால், வழக்கு உயிரூட்டப்பட்டது.
மனுதாரரை ஜாமினில் விடுவித்தால், அது தவறான சமிக்ஞையை கொடுத்து விடும். பொது நலனுக்கு எதிரானதாக ஆகிவிடும். எனவே, ஜாமினில் விடுவிப்பதை பரிசீலிக்க, மனுதாரருக்கு உரிமை இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
எட்டு மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால், இந்த வழக்கை, மூன்று மாதங்களுக்குள், சென்னை முதன்மை சிறப்பு நீதிமன்றம் முடிக்க வேண்டும். தினசரி அடிப்படையில், வழக்கு விசாரணை நடக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

