வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 'இன்சாட் - 3 டிஎஸ்' செயற்கை கோள்!
வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 'இன்சாட் - 3 டிஎஸ்' செயற்கை கோள்!
ADDED : பிப் 18, 2024 05:27 AM

சென்னை : ஜி.எஸ்.எல்.வி., - எப்14 ராக்கெட், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறியும், 'இன்சாட் - 3 டிஎஸ்' செயற்கைக்கோளை நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.
'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு, பாதுகாப்புபோன்றவற்றிற்கான செயற்கைக்கோளை வடிவமைக்கிறது.
அதை, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் செலுத்துகிறது.
தற்போது, வானிலை மற்றும் புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே கண்டறிய, 25 ஆய்வு கருவிகளுடன், 'இன்சாட் - 3 டிஎஸ்' செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் எடை, 2,274 கிலோ.
அந்த செயற்கைக்கோளை சுமந்தபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., - எப்14 ராக்கெட் நேற்று மாலை 5:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
கவுன்டவுண்
இதற்கான, 27 மணி நேரம், 30 நிமிடங்களுக்கான, 'கவுன்டவுண்' நேற்று பிற்பகல் 2:05 மணிக்கு துவங்கியது.
பூமியில் இருந்து புறப்பட்ட 18வது நிமிடத்தில் திட்டமிடப்பட்ட 253.53 கி.மீ., துாரம் உள்ள சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
செயற்கைக்கோள் குறைந்தது, 170 கி.மீ., துாரம், அதிகபட்சம், 36,647 கி.மீ., துாரம் உள்ள சுற்றுவட்ட பாதையில் வலம் வந்து, வானிலை, இயற்கை பேரிடர் தொடர்பான பல்வேறு தகவல்களை உடனுக்குடன் சேகரித்து, இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.
ஜி.எஸ்.எல்.வி., - எப்14 ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., வகையில் அனுப்பப்பட்ட, 16வது ராக்கெட். இது, 51.70 மீட்டர் உயரம் உடையது.
இந்த ராக்கெட், எரிபொருள், செயற்கைக்கோள் என, ஒட்டுமொத்தமாக, 420 டன் எடையை நேற்று சுமந்து சென்றது.
பாராட்டு
'இன்சாட் - 3 டிஎஸ்' செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அடுத்து, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவிஞ்ஞானிகளுக்கு, இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டுகளைதெரிவித்தார்.
திட்ட இயக்குனர் டாமி ஜோசப் பேசியதாவது:
பி.எஸ்.எல்.வி., போல, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டும் இஸ்ரோவின் வலுவான ராக்கெட்டாக மாறியுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி., - எப்14 வெற்றிகரமாக சென்று, துல்லியமாக சுற்றுவட்ட பாதையில், இன்சாட் - 3 டிஎஸ் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. இது, நம் நாட்டின் முழு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 10வது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்.
அமெரிக்காவின் 'நாசா' உடனான சர்வதேச கூட்டு முயற்சியுடன் அடுத்த ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவ இருப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.