ஜாதி பெயரை நீக்குவதாக கூறி ஜி.டி.நாயுடுக்கு அவமதிப்பு
ஜாதி பெயரை நீக்குவதாக கூறி ஜி.டி.நாயுடுக்கு அவமதிப்பு
ADDED : ஜன 17, 2024 05:01 AM

கோவையின் இதயப்பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில், பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயரில் தெரு உள்ளது. அதன் நுழைவாயில் பகுதியில், 'ஜி.டி.நாயுடு தெரு' என்ற பெயர் பலகையை மாநகராட்சி நிர்வாகம் வைத்துள்ளது.
அதில் இருந்த, 'நாயுடு' என்ற வார்த்தையின் மீது தி.மு.க., பிரமுகரும், சினிமா இயக்குனருமான 'ரேஸ்கோர்ஸ்' ரகுநாத் என்பவர், திடுமென மை பூசி அழித்தார். இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதை அறிந்த பா.ஜ., தொழில் பிரிவு மாநில துணைத்தலைவர் செல்வ குமார், மற்றும் பா.ஜ., வினர், மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, 'ஜி.டி.நாயுடு வின் பெயர் மீண்டும் அதே நிலையில் தொடரா விட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்று எச்சரித்தனர்.
அதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், ஜி.டி.நாயுடு என்ற முழுப்பெயருடன் உள்ள பெயர் பலகையை வைத்தனர்.
இதுகுறித்து, ரேஸ்கோர்ஸ் ரகுநாத் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியில் தான், போக்குவரத்து கழகங்களுக்கு வைக்கப்பட்டிருந்த ஜாதி தலைவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. எதிலுமே ஜாதி பெயர் இருக்கக்கூடாது; சமத்துவம், சமூக நீதி எதிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், 'நாயுடு' என்று இருந்ததை கருப்பு மை பூசி மறைத்தேன்.
வேறு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

