ADDED : ஜூன் 25, 2011 11:10 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கான ஆய்வுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தியாவில் 65 சதவீதம் மின் உற்பத்தி, நிலக்கரியிலிருந்து எடுக்கப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் மின் உற்பத்தி 75 சதவீதமாகிவிடும். அணுமின் நிலையத்தால் மின் உற்பத்தி செய்யும் போது அதன் கழிவுகளை சரியாக பயன்படுத்த வேண்டும். ஆனால் நிலக்கரி மின் உற்பத்தியில் அவ்வாறு இல்லை. அதன் சாம்பல் சிமென்ட் கம்பெனிகளுக்கு பயன்படுகிறது. இந்தியாவில் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, ஜார்கண்ட் போன்ற இடங்களில் இவை கிடைக்கின்றன.
தமிழகத்தில் நிலக்கரி மூலம் 15 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவிற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது உள்ள நிலக்கரி இருப்பை வைத்து இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை மின் உற்பத்தி செய்யலாம். ராமநாதபுரத்தில் ஏராளமான 'இயற்கை எரிவாயு' பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடித்து, இதுவரை 18 இடங்களில் அவை எடுக்கப்பட்டு வருகின்றன. இவை மூலம் அரசு சார்பில் வழுதூர் பிளான்ட், மற்றும் இரண்டு தனியார் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, நயினார்கோயில், உத்திரகோசமங்கை, வன்னிவயல் போன்ற பகுதிகளில் நிலக்கரி இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 'ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா, என்.எல்.சி.,' சார்பில் 'மினரல் எக்ஸ்புரோரேட்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' ஆகிய இரு நிறுவனங்கள் ஆழ்குழாய் மூலம் நிலக்கரியை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. நிலக்கரி கிடைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் ராமநாதபுரம் தொழில் வளத்தில் தன்னிறைவு பெறும் என்பதில் ஐயமில்லை.