ADDED : டிச 13, 2024 02:54 AM
சென்னை:
'சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில், அடுத்த மாதம் சர்வதேச பலுான் திருவிழா நடைபெற உள்ளது. இதில், ஒன்பது நாடுகளை சேர்ந்த, ராட்சத பலுான்கள் இடம் பெற உள்ளன' என, சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக சுற்றுலா துறை சார்பில் 2015 முதல் பொள்ளாச்சியில் பொங்கல் பண்டிகையின் போது 'சர்வதேச பலுான் திருவிழா' நடத்தப்படுகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, சுற்றுலா பயணியர் மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் வருவர்.
அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி, பொள்ளாச்சியில் மட்டுமின்றி, சென்னை மற்றும் மதுரையிலும், 'சர்வதேச பலுான் திருவிழா' சுற்றுலா துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.
சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியதாவது: பத்தாம் ஆண்டாக அடுத்த மாதம் சர்வதேச பலுான் திருவிழா நடைபெற உள்ளது. இதுவரை பொள்ளாச்சியில் மட்டுமே நடத்தப்பட்டது. இம்முறை சென்னை, மதுரை நகரிலும் நடத்த உள்ளோம். ஜன., 10 முதல் 12ம் தேதி வரை, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை; ஜன., 14 முதல் 16 வரை பொள்ளாச்சி; ஜன., 18 - 19ம் தேதி வரை மதுரையில், 'சர்வதேச பலுான் திருவிழா' நடைபெற உள்ளது.
இதில், 'தாய்லாந்து, பெல்ஜியம், பிரேசில், வியட்நாம், ஜப்பான், பிரான்ஸ் உடப்ட ஒன்பது நாடுகளை சேர்ந்த, ராட்சத பலுான்கள் இடம்பெற உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.