அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எஸ்.ஆர்.எம்., பல்கலையில் இன்று துவக்கம்
அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எஸ்.ஆர்.எம்., பல்கலையில் இன்று துவக்கம்
ADDED : மே 02, 2025 11:06 PM
சென்னை:திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம், அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.ஆர்.எம்., பல்கலை தமிழ்ப்பேராயம் ஆகியவை இணைந்து நடத்தும், ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில், இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இம்மாநாடு, 'சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியங்கள் வரை சித்தாந்த பதிவுகள்' என்ற தலைப்பில் நடக்கிறது. இன்று காலை 8:30 மணிக்கு மங்கள இசையுடன் மாநாடு துவங்குகிறது.
துவக்க விழாவுக்கு, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பாரிவேந்தர் தலைமை வகிக்க உள்ளார். திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம், 27வது குரு மகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்குகிறார்.
மலேஷியா, கோலாலம்பூர் ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் தலைவர் டத்தோ நடராஜா, சைவ சித்தாந்த ஆங்கில நுால் தொகுப்பு பெற்று, வாழ்த்துரை வழங்க உள்ளார். மதுரை ஆதீனம், 293வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சைவ சித்தாந்த கட்டளை நுால் திரட்டு தொகுப்பு நுாலை வெளியிடுகிறார்.
குன்றக்குடி ஆதீனம், 46வது குரு மகா சன்னிதானம் பொன்னம்பல அடிகளார், சைவ சித்தாந்த வினா - விடை நுாலை வெளியிட்டு, அருளாசி வழங்க உள்ளார்.
சைவ சித்தாந்த ஆங்கில நுால் தொகுப்பை கவர்னர் ரவி வெளியிட்டும், மாநாட்டு சிறப்பு மலரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்டும் சிறப்புரையாற்ற உள்ளனர். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லுாரி செயலர் செல்வவிநாயகம் நன்றி கூறுகிறார்.
இன்று மதியம் முதல், 5ம் தேதி வரை மாநாட்டில் ஆய்வரங்கம், நுால் வெளியிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இவற்றில் பல்வேறு ஆதீனங்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
நிறைவு நாளான 5ம் தேதி மதியம், கருத்தரங்க மலர் வெளியீடு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மஹாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன், ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு நிறைவுரையாற்ற உள்ளார்.
மாநாட்டில், 75 நுால்கள் வெளியிடப்பட உள்ளன. பலர் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர்.