ADDED : ஆக 07, 2025 11:20 PM
சென்னை:''தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகமான, இ.எஸ்.,ஐ.,யில் தொழிலாளர்களை இணைக்க, 'ஸ்பிரீ' என்ற சிறப்பு திட்டம் அமலில் உள்ளது. இதுவரை பதிவு செய்யாத நிறுவனங்கள், எந்த அபராதமும் இன்றி பதிவு செய்யலாம்,'' என, இ.எஸ்.ஐ.,யின் தென்மண்டல இயக்குநர் வேணுகோபால் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தொழில் நிறுவனங்கள் தாமாக முன்வந்து, இ.எஸ்.ஐ., என்ற தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் பதிவு செய்வதற்காக, 'ஸ்பிரீ' என்ற சிறப்பு திட்டம், கடந்த ஜூலை 1 முதல் வரும் டிசம்பர் 31 வரை செயல்படுத்தப்படுகிறது. குறைந்தபட்சம், 10 தொழிலாளர்கள் உள்ள தொழிற்சாலைகள், உணவகங்கள், திரையரங்குகள், சாலை பணியாளர்கள், கல்வி நிறுவனங்கள், பத்திரிகை துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள், இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்ய வேண்டும்.
இப்படி பதிவு செய்பவர்களுக்கு, மருத்துவம் மற்றும் சமூக பாதுகாப்பு, மகப்பேறு விடுமுறை போன்ற பயன்கள் கிடைக்கும். 'ஸ்ப்ரீ' திட்டம் வாயிலாக, இ.எஸ்.ஐ.,யில் தொழிலாளர்களை எளிமையாக இணைக்க முடியும். இதுவரை பதிவு செய்யாமல் இருந்த நிறுவனங்களும், இத்திட்டத்தின்படி எந்த அபராதமும் செலுத்தாமல் பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் எட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் மூன்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. துாத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதுாரில், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் கட்டுமான பணி முடிவடையும் தருவாயில் உள்ளது; டிசம்பருக்குள் அவை பயன்பாட்டிற்கு வரும்.
ஈரோடு, திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் செங்கல்பட்டு நகரங்களில், ஈ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் கட்ட நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

