UPDATED : அக் 14, 2026 08:28 PM
ADDED : அக் 14, 2026 07:46 PM

கொழும்பு: முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, 71, மீதான வழக்கில், அவருக்கு எதிராக, 'இன்டர்போல்' அமைேப்பின் 'ரெட் நோட்டீஸ்' பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், கைது செய்வதற்கான பிடி வாரன்டையும் இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், 2014ல் நிதியமைச்சராக பதவி வகித்தவர் பசில் ராஜபக்சே. முன்னாள் அதிபர்களான மஹிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் இளைய சகோதரரான பசில் ராஜபக்சே, அந்நாட்டு சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக, பிடி வாரன்டை பிறப்பிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேடப்படும் நபராக அறிவிப்பதற்கான, இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் ரெட் நோட்டீஸ் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
