மாபியா பிடியில் மாவட்டம்; காங்கிரஸ் எம்.எல்.ஏ., காட்டம்: கனிம கொள்ளையை தட்டிக்கேட்கிறார் தாரகை!
மாபியா பிடியில் மாவட்டம்; காங்கிரஸ் எம்.எல்.ஏ., காட்டம்: கனிம கொள்ளையை தட்டிக்கேட்கிறார் தாரகை!
UPDATED : செப் 05, 2024 07:37 AM
ADDED : செப் 05, 2024 07:30 AM

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டமே மாபியா பிடியிலும், குவாரி முதலாளிகளின் பிடியிலும் இருக்கிறது என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., தாரகை குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை சூழ்ந்த ஒரு மலைப்பகுதியாக உள்ளது. இயற்கை வளங்கள் அதிக அளவு கொட்டிக் கிடக்கிறது. ஆனால் இந்த இயற்கையை அழித்தே தீருவேன் என கங்கணம் கட்டி கொண்டு சில குவாரிகாரர்கள், சிலரை உடந்தையாக வைத்துக்கொண்டு கனிமவளங்களை கேரளாவுக்கு லாரிகளில் கடத்துகிறார்கள்.
சாலைகள் சேதம்
இது எப்படி அனுமதி இல்லாமல் கடத்தி செல்கிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது. கனிம வளங்களை கடத்தி செல்லும் லாரி டிரைவர்கள் விளவங்கோடு தொகுதி, மார்த்தாண்டம் வழியாக செல்வதால், ரோடுகள் மிகவும் பாதிக்கப்பட்டு குண்டும் குழியாக மாறுகிறது.
தினமும் விபத்துக்களும் அதிகம் நடக்கிறது. உயிர்சேதமும் ஏற்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன், இரண்டு லாரிக்காரர்கள் முந்திச்செல்ல முயன்றதால் விபத்து ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைப்பிடிப்பேன்
கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மாபியா கொள்ளைக்காரர்கள் மற்றும் குவாரி முதலாளிகளிடம் சிக்கி இருக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் அதிகம் பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள், மார்த்தாண்டம் வழியே சென்றால், எனது தலைமையில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் செய்து லாரிகளை சிறைப்பிடிப்பேன் என உறுதியாக கூறி கொள்கிறேன். உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.