ADDED : பிப் 23, 2024 02:48 AM
நாச்சியாபுரம்: ''லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை பிப்.,24 ல் முடிவு செய்வோம்,'' என சிவகங்கை மாவட்டம் நாச்சியாபுரத்தில் அதன் நிறுவனர் சரத்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: திருச்சியில் பிப்., 24 ல் சமத்துவ மக்கள் கட்சி உயர்மட்ட குழு கூட்டம் நடக்கிறது. லோக்சபா தேர்தலுக்கான நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும். அமெரிக்காவில் இன்றும் ஓட்டுச்சீட்டு நடைமுறையில் உள்ளது. மின்னணு இயந்திர ஓட்டுப்பதிவில் நம்பிக்கை இல்லை என்றால் ஓட்டுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்தலாம்.
தமிழகத்தில் நடக்கும் சிறு,சிறு சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என்று கூற முடியாது. மீனவர்கள் கடலில் எல்லையை தாண்டாமல் மீன் பிடிக்க வேண்டும். தவறுதலாக செல்லும் மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இ.டி., ஐ.டி.க்களை மத்திய அரசின் ஏஜன்ட் என்று விமர்சிப்பது வழக்கமானது தான்.
பா.ஜ.,வின் வளர்ச்சியை கணிக்க என்னிடம் அளவுகோல் இல்லை. கட்சியை வளர்க்க அதன் தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையாக உழைக்கிறார். விஜய் கட்சியை மக்கள் ஏற்பார்களா என்பது 2026 தேர்தலில் தான் தெரியும். 2026 ல் விஜய் தேர்தலை சந்திப்பதாக கூறியுள்ளார். மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது அப்போது தெரிய வரும் என்றார்.