ஆபாச படம் அனுப்பி மிரட்டல்: 'மாஜி' காதலர் மீது வழக்கு
ஆபாச படம் அனுப்பி மிரட்டல்: 'மாஜி' காதலர் மீது வழக்கு
ADDED : பிப் 02, 2024 06:35 AM

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள வேம்பனுாரைச் சேர்ந்தவர் கருணாகரன், 24. இவர், அதே பகுதியில் உள்ள உறவுக்கார பெண்ணை காதலித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த பெண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள கருணாகரன் முயற்சித்தார். அந்த பெண்ணோ, அவருடன் பேசவில்லை.
இதனால் கோபமடைந்த கருணாகரன், தான் காதலித்தபோது, ஆபாச நிலையில் சேர்ந்து இருவரும் எடுத்த போட்டோக்களை, பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸாப்பில் அனுப்பி, அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து பெண்ணின் குடும்பத்தார், அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.
இன்ஜினியரிடம் 'ஜிபே' மூலம் பணம் பறிப்பு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 38, சென்னை ஐ.டி., நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வந்த இவர், நேற்று முன்தினம் சென்னை செல்ல, இரவு 9:30 மணிக்கு சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்தார்.
அப்போது, அங்கு நின்றிருந்த மூன்று திருநங்கையர், கார்த்திக்கிடம் பேசி, அவர்கள் அறைக்கு அழைத்து சென்றனர். பின், அவரை மிரட்டி, 'ஜிபே' வாயிலாக, 50,000 ரூபாயை பறித்தனர். கார்த்திக் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, திருநங்கையர் மியா, 23, ரஷ்னா, 25, அம்மு, 19, ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விலாரி கிராமத்தைச் சேர்ந்தவர் நமசிவாயம், 56; ஆற்காடு கோட்ட நெடுஞ்சாலை அலுவலகத்தில் சாலை பணியாளர். நேற்று முன்தினம் மாலை, ஆற்காட்டிலுள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.,மில், 24,000 ரூபாய் எடுத்தார். தொடர்ந்து, மினி ஸ்டேட்மென்ட் பெற, மீண்டும் ஏ.டி.எம்., கார்டை மெஷினில் சொருகினார்; ஸ்டேட்மென்ட் வரவில்லை.
அப்போது அங்கிருந்த ஒருவர், அவருக்கு உதவுவது போல நடித்து, வேறு ஏ.டி.எம்., கார்டை கொடுத்துவிட்டு, நமசிவாயத்தின் கார்டுடன் அங்கிருந்து நழுவினார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவரது வங்கி கணக்கிலிருந்து, கிருஷ்ணகிரியிலுள்ள ஏ.டி.எம்.,மில் 56,000 ரூபாய் எடுக்கப்பட்டது தெரிந்தது.
சிறுமிக்கு திருமணம்: மணமகன் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறைவடையாத சிறுமிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைப்பதாக, சமூக நலத்துறைக்கு புகார் சென்றது. நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் அப்பகுதிக்கு சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியின் பெற்றோர், மணமகன், மணமகனின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
5 வயது சிறுமி பலாத்காரம்: முதியவருக்கு சாகும் வரை சிறை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த வாசுதேவன்பட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், 69; கூலி தொழிலாளி. இவர், 2019 அக்., 10ம் தேதி, 5 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். பாச்சல் போலீசார் ராஜேந்திரனை போக்சோவில் கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று, ராஜேந்திரனுக்கு சாகும் வரை சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

