அதிநவீன சிக்னல் அறிமுகம்; ரயில்கள் தாமதம் குறையும்
அதிநவீன சிக்னல் அறிமுகம்; ரயில்கள் தாமதம் குறையும்
ADDED : பிப் 11, 2025 05:19 AM
சென்னை : 'அதிநவீன சிக்னல் முறையால், ரயில்கள் இயக்கத்தில் தாமதம் குறையும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை ரயில்வே கோட்டத்தில், பொன்பாடி -- ஆந்திர மாநிலம் நகரி, -வேப்பகுண்டா -- புத்துார் தடத்தில், 23.11 கி.மீ., துாரம் கணினி மயமாக்கப்பட்ட நவீன தானியங்கி சிக்னல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, ஒரே நேரத்தில் இரு மார்க்கமாக, 30 ரயில்களை இயக்க முடியும். அதாவது, அரக்கோணம் நோக்கி 13 ரயில்களையும், ரேணிகுண்டா நோக்கி 17 ரயில்களையும் இயக்க முடியும்.
ரயில்களுக்கு விரைவாக சிக்னல் அளிப்பதோடு, துல்லிய தன்மையும் அதிகமாக இருக்கும். அரக்கோணம் -- புத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே, அதிக ரயில்களை இயக்க முடியும். மேலும், அரக்கோணம் -- ரேணிகுண்டா இடையே, ரயில்களின் சராசரி வேகம் மேம்படும். படிப்படியாக மற்ற முக்கிய வழித்தடங்களிலும், இந்த சிக்னல் தொழில்நுட்பம் விரிவாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.