'விஜய்க்கு நடந்தது அநீதி' பதிவு வெளியிட்ட 'யு டியூபரிடம்' விசாரணை
'விஜய்க்கு நடந்தது அநீதி' பதிவு வெளியிட்ட 'யு டியூபரிடம்' விசாரணை
ADDED : அக் 05, 2025 01:42 AM
சென்னை: 'கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் த.வெ.க., தலைவர் விஜய்க்கு நடந்தது அநீதி' என, பதிவிட்ட, 'யு டியூபர்' மாரிதாஸ், போலீஸ் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார்.
விஜய்க்கு ஆதரவான பதிவை, சமூக வலைதளத்தில் மாரிதாஸ் வெளியிட்டு இருந்தார். அதில், 'விஜய்க்கு நீதிமன்றத்தில் நடந்தது அநீதி. இது ஒருதலை பட்சமானது.
'அவர் தரப்பு விளக்கம் இல்லாமல், தி.மு.க., - மீடியா - வழக்கறிஞர் ஒன்றுகூடி வெட்கமே இல்லாமல் முடித்துள்ளனர்.
'த.வெ.க., தரப்பில் வாதத்தை முன் வைக்காத நிலையை உருவாக்கி, தந்திரமாக ஒரு நீதிமன்ற நாடகத்தையே, தி.மு.க., நடத்தி முடித்து உ ள்ளது. இதை மக்கள் ஏற்கக்கூடாது' என, கூறியிருந்தார்.
அத்துடன், 'நீதிமன்றத்தில் தி.மு.க., கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விபரம்; விஜய்க்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன என்பதை, வீடியோவாக மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும்' என, மற்றொரு பதிவில் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று, சென்னை நீலாங்கரையில் இருந்த மாரிதாஸை விசாரணைக்கு அழைத்து சென்றனர். நான்கு மணி நேர விசாரணைக்கு பின், அவரை விடுவித்தனர்.
'மாரிதாஸ் விசாரணைக்கு தான் அழைத்து செல்லப்பட்டார். அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப் படவில்லை' என, போலீசார் தெரிவித்தனர்.