சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குகள் அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் ஆய்வு
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குகள் அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் ஆய்வு
ADDED : பிப் 23, 2024 01:48 AM

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் உள்ள அலுவலகத்தில், அமலாக்க துறையின் சிறப்பு இயக்குனர் ராகுல் நவீன் ஆய்வு நடத்தினார்.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ், அமலாக்கத்துறை செயல்படுகிறது. அதன் இடைக்கால சிறப்பு இயக்குனராக, ராகுல் நவீன் பணியாற்றி வருகிறார்; 1993ம் ஆண்டு, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான இவர், அமலாக்கத்துறையின் முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.
ராகுல் நவீன் நேற்று சென்னைக்கு வந்தார். நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை, 10:30ல் இருந்து, 12:15 மணி வரை சட்ட விரோத பணப்பரிமாற்றம், அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி; தற்போது அமைச்சர்களாக உள்ள உதயநிதி, அனிதா ராதாகிருஷ்ணன், நேரு, கீதா ஜீவன் உள்ளிட்டோர் தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்துஉள்ளார்.
அதேபோல, மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி விவகாரம்; மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில், அத்துமீறி நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச் சென்ற ஆவணங்கள் குறித்தும், பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மீதான வழக்கு விபரங்களையும் ஆய்வு செய்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காத நிலையில், அதை மேலும் நீடிப்பதற்கு தேவையான ஆவணங்கள், ஆதாரங்களை திரட்டி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.