அன்னிய நிறுவனங்களுடன் கூட்டு உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு
அன்னிய நிறுவனங்களுடன் கூட்டு உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 28, 2025 10:59 PM

திருப்பூர் :வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் செய்ய விருப்பமுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு, ஏ.இ.பி.சி., எனும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்வெஸ்ட் இந்தியா என்ற இந்திய அரசின் தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதி நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் கூட்டு வர்த்தகம் செய்ய விரும்பும், கொரியா, ஹாங்காங் நாட்டு நிறுவனங்கள் குறித்து, ஏ.இ.பி.சி., நிர் வாகிகளுடன் அவர்கள் ஆலோசித்தனர்.
அதன்படி, நம் நாட்டில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், வெளிநாட்டு உற்பத்தியாளர் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன், கூட்டு வர்த்தகம் செய்து பயன்பெறலாம் என, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
உலக அளவில், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் ஹாங்காங் ஆடை உற்பத்தி நிறுவனம், இந்தியாவில் கூட்டு வர்த்தகம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. வியட்நாம், மியான்மர், இந்தோனேஷியா நாடுகளில் உற்பத்தி தொழிற்சாலைகள் நடத்தி வரும், கொரியாவின் ஆடை உற்பத்தி நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உற்பத்தி கட்டமைப்பை கொண்டுள்ள ஒருங்கிணைந்த கொரிய ஆடை உற்பத்தி நிறுவனமும், இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. உள்நாட்டு வர்த்தகம் செய்யும் முன்னணி நிறுவனங்கள், ஒருங்கிணைந்த நுால் மற்றும் ஆடை உற்பத்தி அமைப்புகளை கொண்ட நிறுவனங்களுடன், கூட்டு வர்த்தகம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.