"எனது கணவர் மீது தவறான புகார்" ஐ.பி.எஸ்., அதிகாரி மனைவி அதிர்ச்சி பேட்டி
"எனது கணவர் மீது தவறான புகார்" ஐ.பி.எஸ்., அதிகாரி மனைவி அதிர்ச்சி பேட்டி
UPDATED : பிப் 14, 2025 09:07 AM
ADDED : பிப் 14, 2025 08:41 AM

சென்னை: “இது பாலியல் துன்புறுத்தல் விவகாரம் அல்ல. அந்தப் பெண்ணுக்கும், என் கணவருக்கும், ஓராண்டு காலமாக தவறான உறவு இருந்தது. இதை நான் கண்டித்தேன். பணம் பறிப்பதற்காக இப்படி புகார் அளித்துள்ளனர்,'' என பாலியல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மகேஷ்குமார் ஐ.பி.எஸ்.,ஸின் மனைவி அனுராதா தெரிவித்தார்.
சென்னை காவல் துறையில், வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனராக உள்ள டி.ஐ.ஜி., மகேஷ்குமார் மீது, அப்பிரிவில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவர், தன் கணவருடன் சென்று, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், இணை கமிஷனர் மகேஷ்குமார், பாலியல் ரீதியாக தனக்கு தொந்தரவு கொடுத்தார் என்றும், தனக்கும், குடும்பத்திற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தினார் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து மகேஷ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் சக்திவேல், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ஐ.ஜி., மகேஷ்குமார் மனைவி அனுராதா கூறியதாவது:
நேற்றைய நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். எனது வாழ்க்கையில் பெரிய இடி விழுந்த மாதிரி இருந்த நாள். எனது திருமண நாளில் பழிவாங்கும் நோக்கில் அந்த பெண் செய்தது எனக்கு அதிர்ச்சி அளித்தது. இரவு 12:00 மணிக்கு எனது கணவருக்கு சஸ்பெண்ட் ஆர்டரை கொடுத்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உழைப்புக்கு கிடைத்த ஒரு பெரிய அவமானம் இது. எங்கு வேலை செய்தாலும் தங்கமாக தான் எனது கணவர் வேலை செய்திருக்கிறார்.
தெய்வமே!
இன்றைக்கும் யாரை கேட்டாலும் எனது கணவரை தெய்வமே என்று தான் கூப்பிடுவார்கள். அந்த அளவுக்கு அனைவருக்கும் எனது கணவர் நல்லது செய்து இருக்கிறார். முகம் தெரியாத நபருக்கு கூட நிறைய உதவிகள் செய்திருக்கிறார். பழிவாங்கும் நோக்கில் ஒரு பெண் போலீஸ் எனது கணவருக்கு இன்றைக்கு செய்த காரியத்தினால் எனது குடும்பம் கஷ்டப்பட்டு சிதைந்து நிற்பது போல் இன்னொரு குடும்பம் நிற்கக் கூடாது. எனது கணவர் மீது அந்தப் பெண் போலீஸ் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறுகிறார். அந்த மாதிரி எது நடக்கவில்லை.
எனது கணவருக்கும் அந்தப் பெண் போலீசுக்கும் இடையே உறவு இருந்தது எனக்கு தெரியும். எனக்குத் தெரிந்தவுடன், பலமுறை அவர்கள் இருவரையும் கண்டித்து உள்ளேன். அந்தப் பெண்ணிடம் பலமுறை தொலைபேசியில் கெஞ்சி இருக்கிறேன். உனக்கும் குடும்பம் இருக்கிறது. எனக்கும் குடும்பம் இருக்கிறது. இந்த மாதிரி செயல் செய்ய வேண்டாம் என்று பலமுறை கண்டித்துள்ளேன். எனது தந்தையும் போலீஸ் டிபார்ட்மெண்டில் வேலை செய்துள்ளார்.
அநீதி நடந்தால் நான் எதிர்த்து தான் கேட்பேன். ஆதரவு அளிக்க மாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவை பாலியல் தொந்தரவு என்று அந்தப் பெண் போலீஸ் கூறியுள்ளார். எனது திருமண நாளில் அந்தப் பெண், திட்டமிட்டு பாலியல் புகார் அளித்து எனது குடும்பத்தை பிரிக்க பார்த்திருக்கிறார். இது ரொம்ப தாங்க முடியாத வேதனை. பாலியல் புகார் அளித்த பெண் காசு கேட்கும் போதெல்லாம் எனது கணவர் காசு கொடுப்பார்.
ரூ.25 லட்சம்
இப்பொழுது அந்தப் பெண் ஒரு வீடு கட்டிக் கொண்டிருப்பதால் அதிக பணம் எனது கணவரிடம் கேட்டுள்ளார். பணம் கேட்டு அந்தப் பெண் எனது கணவரிடம் மிரட்டல் விடுக்க ஆரம்பித்து விட்டார்.இதனால் தான் இப்பொழுது பிரச்னை வந்திருக்கிறது. நாங்கள் நேர்மையான முறையில் பணம் சம்பாதிப்பவர்கள். எங்களிடம் ரூ.25 லட்சம் கேட்டால் நாங்க எங்க போவது? தவறாக எனது கணவர் மீது பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இது உண்மைக்கு புறம்பானது. அவர்கள் இருவரும் தெரிந்தே தான் உறவுமுறை வைத்து பேசி வந்தனர். இதனை எப்படி அந்தப் பெண் பாலியல் தொந்தரவு என்று சொல்ல முடியும். கடந்த ஒரு வருடமாக அவர்கள் இருவரிடமும் உறவு இருந்து வந்தது. எனக்கும் குடும்பம் இருக்கிறது. இதனால் புகார் அளிக்கவில்லை. பிரச்னை சரியாகிவிடும் என்று காத்திருந்தேன். இதுவரைக்கும் எனது கணவர் இது மாதிரி எந்த தவறும் செய்யவில்லை.
உதவி மனப்பான்மை
எனது கணவருக்கு உதவி மனப்பான்மை அதிகம் உள்ளது. அந்தப் பெண் போலீஸ் கஷ்டத்தை கூறியதும் எனது கணவர் உதவி செய்ய நினைத்திருப்பார். அதனை அந்தப் பெண் தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டு உள்ளார். எனது கணவர் உதவாத ஆளே இருக்க முடியாது. எனது கணவரிடம் உதவி என்று கேட்டால் அவர் கண்டிப்பாக செய்திருப்பார். முகமே தெரியாத நபர் தொலைபேசி மூலம் உதவி கேட்டாலும் எனது கணவர் செய்வார். எனது கணவர் வேலை செய்த அனைத்து இடத்திலும் விசாரித்துப் பாருங்கள்.
வேலை செய்யும் இடத்தில் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக தவறான முறையில் எனது கணவர் மீது அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதற்கு ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. அனைவருக்கும் மனசாட்சி இருக்கிறது. டிபார்ட்மெண்டில் 25 ஆண்டுகளாக எனது கணவர் கஷ்டப்பட்டு எடுத்த பெயரை ஒரே நாளில் சிதைத்து விட்டு போவது ஈஸி. இந்த நல்ல பெயரை எடுப்பதற்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம் என்பது எங்களுக்கு தான் தெரியும்.
நடவடிக்கை
காக்கி சட்டை என்பது ஆசை ஆசையாக போட்டது அந்த சட்டையை உருவி எடுக்க வேண்டும் என்று நினைத்து செய்தால் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. திருமண நாளன்று இப்படி ஒரு பெரிய இடியை அந்தப் பெண் போட்டிருக்கக் கூடாது. சரியான முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரகதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. எனது பெயருக்கு அவபெயரை ஏற்படுத்த கூடாது என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.