ADDED : டிச 20, 2025 03:47 AM

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்குவதால், 'அரசியல் கட்சிகளின் சார்பு அதிகாரிகள்' என்ற குற்றச்சாட்டில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, சிறப்பு பிரிவுகளுக்கு மாறும் முயற்சியில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல, அவர் களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்படும்.
பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 40 பேரின் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பட்டியலில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியில் உள்ள, போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி.,க்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் தங்கள் மீது, அரசியல் கட்சிகளின் சார்பு அதிகாரிகள் என்ற முத்திரை குத்தப்படாமல் இருக்க, சிறப்பு பிரிவுகளில் தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில், சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணிபுரியும் போது, அரசியல் கட்சிகளின் சார்பு அதிகாரிகள் என்ற முத்திரை குத்தப்படும்.
ஆளும் கட்சிக்கு தேவையான உதவிகளை செய்தார் என்ற குற்றச்சாட்டிலும் சிக்க நேரிடும். அதனால், தேர்தல் கமிஷனின் நெருங்கிய கண்காணிப்பிற்கும், நடவடிக்கைக்கும் ஆளாகி, பணி பதிவேட்டிலும் கரும்புள்ளி வைக்கப் படும்.
இதையெல்லாம் தவிர்க்கவே, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி., - லஞ்ச ஒழிப்பு துறை, பொருளாதார குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, தலைமையிடத்து டி.ஜி.பி., உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கு மாற்றம் கேட்டு, பொறுப்பு டி.ஜி.பி., அபய்குமார் சிங்கிடமும், அரசிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

